நெடுந்தீவில் கடற்படை முகாமுக்கு அருகில் 5 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்!! நடந்தது என்ன?
நெடுந்தீவில் கடற்படை முகாமுக்கு அருகில் 5 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்!! நடந்தது என்ன?
இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
மாவிலி துறைமுகத்திற்கு எதிராக, கடற்படை முகாமிலிருந்து சில மீற்றர்கள் தொலைவிலுள்ள வீட்டில் இந்த சம்பவம் நடந்தது. அதாவது, நெடுங்தீவின் முதலாவது வீடு என்றும் அந்த வீட்டை குறிப்பிடலாம்.
அந்த வீட்டில் மூதாட்டியொருவர் தனித்து வாழ்ந்து வந்தார். அவரது கணவர், 1986 ஆம் ஆண்டு குமுதினி படுகொலையில் கொல்லப்பட்டார். குமுதினி படுகொலை நினைவேந்தலில் அந்த மூதாட்டியே முக்கிய பங்காற்றுபவர்.
அவரது உறவினரான முதியவர் ஒருவரும் அங்கு தங்கியுள்ளனர்.
உணவு தயாரித்து விற்பது, துறைமுகத்திற்கு வரும் வெளியிடத்தவர்களிற்கு தங்குமிடம் வழ்குவது போன்ற தொழில்களை அவர் செய்து வந்தார்.
அண்மையிலுள்ள பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்திற்காக அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். இதன்போதே கொலைச்சம்பவம் நடந்துள்ளது. நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் (இராசாவின் தோட்டம், குருநகர்), முல்லைத்தீவைஆ சேர்ந்த 6 பேர் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர். பிரித்தானியாவில் இருந்து வந்திருந்த பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திலுள்ள தகவலின்படி, இன்று காலை 7 மணியளவில் கொலை பற்றி தகவல் தெரிய வந்தது.
காலை 6 மணியவில் வெளிநாட்டிலுள்ள உறவினர் ஒருவர், அந்த வீட்டிலிருந்த ஒருவருக்கு பலமுறை தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். எனினும், பதிலில்லாததால், அரகிலுள்ள உறவினரான கடை உரிமையாளருக்கு தகவல் வழங்கினார். அவர் காலை 7 மணியளவில் சென்ற போது, வீட்டிற்குள் 6 பேரும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்.
ஒரு பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்த பெண்ணை மீட்ட போது, 4 பேர் வந்து வெட்டியதாக அவர் தகவலளித்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரான- வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண், அண்மையில் சிலை உடைப்புக்கு எதிராக நல்லூரில் நடந்த போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.
கடற்படை முகாமிற்கு மிக அண்மையாக உள்ள வீட்டிலேயே கொலையாளிகள் கைவரிசை காட்டியுள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
நெடுந்தீவு தனிநாயகம் அடிகளாரின் ஞாபகார்த்த சிலையின் பின்புறமாகவும் நெடுந்தீவின் பிரதான கடற்படை முகாமாகிய வசப முகாமின் எதிர்ப்பக்கமாவும் இவ்வீடு அமைந்திருக்கின்றது.
கடற்படைமுகாமுக்கும் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கும் சில மீற்றர் இடைவெளியே காணப்படுகின்றது.
நூற்றுக்கணக்கான கடற்படையினர் காணப்படுகின்ற இந்த முகாமின் முன்னாலுள்ள வீட்டின் மீது இவ்வாறான தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்செல்வதென்பது எண்ணிப்பார்க்கமுடியாத சம்பவமே.சாதாரணமாக நெடுந்தீவுக்குள் நுழையும்போதே ஆள் அடையாள அட்டை பதிவு செய்தல், குறுக்கு விசாரணைகள் போன்ற நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துவருகின்ற நிலையில் இவ்வாறான கொடூர தாக்குதலை நடாத்திவிட்டு இலகுவாக தப்பிச்செல்லமுடியுமெனின் பாரியதொகையிலான மக்களின் வரிப்பணத்தில் அந்த முகாம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது என தீவக சிவில் சமூகம் அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிக்க செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்கு பயணம் செய்வதற்காக குறிக்கட்டுவானுக்கு செல்லவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
May be an image of 7 people
நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.இதுதொடர்பாக வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன், இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை நெடுந்தீவில் இருந்து வெட்டு காயங்களோடு கொண்டுவரப்பட்ட 100 வயது மூதாட்டியின் உடல் நிலை தேறி வருவதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
மூதாட்டியின் முகப்பகுதியில் வெட்டு காயமும் கீழ்த் தாடை என்புடைவும் காணப்படுவதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
அதேவேளை அவருக்கு மேலதிக பரிசோதனைகளும் சத்திர சிகிச்சையும் செய்யப்பட வேண்டி இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment