நடாசாவை கைது செய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது? - சந்திரிகா கேள்வி
பௌத்தத்தை அவமதித்த நடாசாவை கைது செய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடாசா பௌத்தத்தை உள்நோக்கத்துடன் அவமதித்தமைக்காக கைதுசெய்யப்பட்டார். அவரை கைதுசெய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த தேவாலயங்களையும் கிறிஸ்தவ வழிபாட்டு இடங்களையும் மசூதிகளையும் எரியூட்டிய ஞானசார தேரர் உட்பட ஏனைய பலரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லீம்கள், தமிழ் பிரஜைகளிற்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சுக்கள் நடாசாவின் வார்த்தைகளை விட தீய நோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ஷாபிக்கு எதிராக பொய்களை தெரிவித்து நாடு முழுவதும் அதனை பரப்பி நல்ல மனிதரின் வாழ்க்கையை அழித்த அயோக்கியர்களிற்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி குற்றவாளிகளை கைதுசெய்து தண்டிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இன்னமும் காலம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அவர் செயற்பட்டால் அதுவே உண்மையான ஜனநாயக நாடாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பௌத்தர்களாகிய நாங்கள் பௌத்தகொள்கைகளை நேர்மையாக பின்பற்றினால் இன்றுள்ளது போல நாடு குழப்பத்தில் காணப்படாது.
பௌத்தம் உயர்ந்த மதிப்பை பெறவேண்டியது அவசியம். ஆனால் ஏனைய அனைத்து மதங்களும் சமமான முக்கியத்துவத்தை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
June 01, 2023
Rating:


No comments:
Post a Comment