முல்லைத்தீவு குருந்தூர் மலையில் விரைவில் சிவாலயம்!
தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்க வேண்டியது. விகாரை கட்டப்பட வேண்டிய இடமல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்.
மிகப்பெரிய அடாவடிகளுக்கு மத்தியில் குவிக்கப்பட்ட பொலிசார், சிறப்பு அதிரடிப்படையினருக்கு மத்தியில் குருந்தூர்மலையினை ஆக்கிரமித்திருக்கின்ற பிக்குவின் அடாவடிகள் ஆக்கிரமிப்புக்களுக்கு மத்தியில் பொங்கல் நிகழ்வு எல்லோரின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றுள்ளது.
பல்வேறு பட்ட தடைகள் இருந்தும் தடைகளை தாண்டி நீதியின் பக்கம் நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதித்துறையினுடைய நியாயமான கரிசனைகள் எண்ணத்தில் எடுக்கப்பட்டு நேர்மையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற இந்த பொங்கலுக்காக எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
தமிழர்கள் ஆதிகாலம் தொட்டு அடையாளமாக வாழ்ந்து வந்த குருந்தூர் மலையிலே அவர்களை இருப்பினை இல்லாமல் செய்து இதனை ஒரு பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ளார். எந்த வித அனுமதியும் இன்றி தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான ஆதரவுடனும் அரச ஆதரவுடனும் கட்டப்பட்டுள்ளது. அதேநேரம் இங்கிருந்த ஆதிசிவன் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் ஒரு பொங்கல் செய்வதற்கு இந்த இடத்தில்தான் நீங்கள் பொங்க வேண்டும். ஒரு இடத்தினை குறிப்பிட்டு அந்த இடத்தில் கல் வைத்து, அதன்மேல் தகரம் வைத்து, அதன்மேல் அடுப்பு,வைத்துதான் பொங்க வேண்டும் என்ற அதிசயமான சட்டங்களை இந்த மண்ணில் இந்த ஆலயத்தில் பார்க்க முடிந்தது .
தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது. அந்த இடத்தில் விகாரை கட்டப்பட வேண்டிய இடமல்ல. இங்கு சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழர்கள் வாழ்கின்ற பூர்வீக நிலங்களுக்கு ஒரு சட்டமாக ஆக்கிரமிப்பாளர்களின் நிலையினை இந்த இடத்தில் பார்கின்றோம். இது தமிழர்களின் இருப்பினையும் எதிர்கால வாழ்வையும் மிகப்பெரிய கேள்விக்குட்படுத்தியுள்ளது.
ஆனாலும், நாங்கள் ஒற்றுமையாக அனைத்து தமிழர்களும் இணைந்து வந்து எம்பெருமான் சிவனுக்குரிய அரோகரா என்ற நாமத்துடன் பொங்கல் நிகழ்வினை முன்னெடுத்தோம். இந்த பொங்கல் நிகழ்வு தொடர்ந்து மாதம் மாதம் நடைபெறும் அதேவேளை மக்களின் இருப்பினையும் அடையாளங்களை பேணும் வகையிலும் எங்கள் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
இந்த இடத்தில் பாரம்பரியமான வரலாற்று புகழ்மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் எல்லோரும் இணைந்து முன்னெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment