மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதிகள் மூடப்பட வேண்டிய அவல நிலை.
மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு அகழ்வு நடவடிக்கை முழுமையாக நிறுத்தம்-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதிகள் மூடப்பட வேண்டிய அவல நிலை.
மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதியில் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) முதல் இடை நிறுத்தப்படுவதாக மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.பிரிட்டோ லெம்பேட் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கழிவகற்றல் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தடங்களை நிவர்த்தி செய்வது குறித்து மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று வியாழக்கிழமை(21) மாலை மன்னார் நகர மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
அதன் போது மன்னார் நகர சபையின் செயலாளர்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர் ,உதவி பிரதேச செயலாளர் ,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,உணவக உரிமையாளர்கள்,அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, பாப்பாமோட்டை பகுதியில் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் மலக்கழிவு மற்றும் திண்ம கழிவுகளை கொட்டி சேகரிக்க கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 23 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாப்பாமோட்டை பகுதியில் மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைந்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், சுமார் 60 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக அமைக்கப்பட்ட குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு முதல் மன்னார் நகர சபை பிரிவில் சேகரிக்கப் படுகின்ற திண்மக்கழிவுகள் மற்றும் மலக் கழிவுகள் அகற்றப்பட்டு குறித்த நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக சேகரிக்கப்படுகிறது.குறித்த செயல்பாடுகள் கடந்த 10 வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.
மன்னார் நகரசபை பிரிவில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவு மற்றும் மலக்கழிவுகளும்,ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மலக் கழிவுகளும் இங்கு சேகரிக்கப்பட்டு வருகிறது.குறித்த செயல்பாடுகள் கடந்த 10 வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில்
குறிப்பாக குறித்த பகுதியில் நிலத்தடி நீர் மாசு படுவதாகவும்,குறித்த பகுதி பறவைகள் சரணாலயத்திற்கு உரிய இடம் என கோரி கடந்த 8 ஆம் திகதி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் கொழும்பு மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் கடந்த 23 ஆம் திகதி மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் எவ்வித கழிவுகளும் கொட்டக்கூடாது என்ற தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக மன்னார் நகர சபை பிரிவில் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு அகழ்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபைக்கு சொந்தமான பாப்பாமோட்டை பகுதியில் அமைந்துள்ள திண்ம கழிவு முகாமைத்துவ நிலையம் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளதுடன் நகரசபையினால் திண்மக்கழிவு மற்றும் மலக்கழிவு அகற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் மருத்துவக்கழிவு,உணவுக்கழிவு மற்றும் மலக்கழிவுகள் அகற்றப்படாமையினால் மன்னார் பொது வைத்தியசாலைக்குறிய பிராந்திய சுகாதார கழிவகற்றல் நிலையம் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது.
அதே நேரம் நோயாளர் விடுதிகளில் உள்ள மலசல கூடங்கள் நிறைந்து வழிவதால் விடுதிகளை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதுடன் மழை காரணமாக டெங்கு நோயும் பெருகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கழிவகற்றல் செயற்பாடுகள் முன் னெடுக்கப்படாத பட்சத்தில் விடுதிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதுடன் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு களஞ்சிய படுத்தப்பட்ட குப்பைகளால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
வைத்தியசாலை மாத்திரமின்றி பொது இடங்கள்,வீடுகள்,அலுவலகங்கள் உணவகங்களிலும் குப்பைகள்,அகற்றப்படாத நிலையே காணப்படுகின்றது.

No comments:
Post a Comment