பிரதேச மட்ட குடும்ப நல்லிணக்க சபை தொடர்பாக சேவை வழங்குனர்களுக்கான செயலமர்வு
பிரதேச மட்ட குடும்ப நல்லிணக்க சபை தொடர்பாக சேவை வழங்குனர்களுக்கான செயலமர்வு.
அம்பாரை மாவட்டத்தில் காதிமன்றங்கள் அமைந்துள்ள 08 பிரதேசங்களிலும் பிரதேச மட்ட குடும்ப நல்லிணக்க சபை அமைத்து அதனூடாக முஸ்லிம் விவாக விவாகரத்து தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் ஆராயப்பட்டு அவற்றுக்கான உரிய முறையில் சரியான வழிகாட்டல் ஆலோசனை சேவைகள் மற்றும் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொடுப்பதன் மூலமாக காதி நீதிமன்றங்களின் சேவைகளை இலகுபடுத்துவதோடு ஏனைய சேவை வழங்குனர்களின் பங்கேற்புடன் நிலைபேறான வினைத்திறனான சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் செயலமர்வு இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் (08) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கே. நிஹால் அஹமட் அவர்களின் ஒருங்கிணைப்பில் வளவாளராக கலந்து சிறப்பித்த கலாநிதி ரஊப் செய்ன் அவர்களினால் வளப்பகிர்வு இடம்பெற்றது.
அதில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் (Muslim Marriage and Divorce Act) பற்றிய அறிமுகம், அதன் சீர்திருத்தம் தொடர்பான வரலாற்று பின்னணி மற்றும் அதன் தற்போதைய பிரயோக சவால்களும், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை அமுல்படுத்துவதில் காதி நீதிமன்றங்களை வலுப்படுத்துவதிலும் திருமண நிகழ்வுகளை முறைப்படுத்துவதிலும் சமூக மட்ட பங்குதார்களின் பொறுப்புக்களும் வகிபங்கும்.
குடும்ப நல்லிணக்க சபை ஒன்றின் தேவைப்பாடும் அதன் வகிபாகமும், குடும்ப வாழ்வில் பாதிப்புற்று நலிவுறும் பெண்கள் குழந்தைகளைப் பாதுகாத்தலுக்கும், காதி நீதிமன்றங்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கான சமூகத்தின் பொறுப்புணர்வை அதிகரிக்கும் திட்டம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கே. நிஹால் அஹமட் அவர்களினால் பிரதேச மட்ட குடும்ப நல்லிணக்க சபை தொடர்பான அறிமுகம் வழங்கப்பட்டு இறக்காமம் பிரதேசத்திற்கான சபை தெரிவுசெய்யப்பட்டது. மேலும் அவற்றின் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுரை வழங்கிவைக்கப்பட்டது.
இச்சபையினூடாக, பிரதேசத்தில் தீர்க்க முடியுமான குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் மற்றும் அவற்றுக்கான ஆலோசனைகள் வழிகாட்டல்களை வழங்கல், தீர்க்க முடியாத பிரச்சினைகளை காதி நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லல், திருமணத்திற்கு முன்னரான ஆலோசனைகள், பின்னரான ஆலோசனை சேவைகளை வழங்கல்,
நேரடியாகவோ அல்லது காதி நீதிமன்றங்கள் ஊடாகவோ கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், பிரதேச மட்டத்தில் குடும்ப பிணக்குகள் மற்றும் விவாகரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்கு விரைவாக நல்ல தீர்வினை பெற்றுக்கொடுப்பதே இக் கட்டமைப்பின் நோக்கமாகும்.
குறித்த செயலமர்வில் காதி நீதவான் சட்டத்தரணி எஸ்.எல். பாறூக், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் உட்பட பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதான ஜும்ஆ பள்ளிவாசல் பிரதிநிதிகள், பிரதேச திருமண பதிவாளர்கள், ஜம்மியதுல் உலமா சபை, கிராம சேவை உத்தியோகத்தர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by வன்னி
on
January 09, 2024
Rating:









No comments:
Post a Comment