அண்மைய செய்திகள்

recent
-

வட கடலில் இந்திய மீனவர்கள் அத்துமீறுவது மாத்திரம் பிரச்சினை இல்லை

 வட கடலில் இந்திய மீனவர்கள் அத்துமீறுவது மாத்திரம் பிரச்சினை இல்லை


வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் ஒரே பிரச்சினை இந்திய மீனவர்களின் படையெடுப்பு எனக் காட்டுவதற்கு அப்பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகள் செயற்படுவதால் மீனவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாக வடபகுதி மீனவர் சங்கத்தின் தலைவர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


புது வருடத்தினத்தன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடக்கின் ஒன்றிணைந்த மீனவர் சங்கத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் அரசியல் அதிகாரங்களின் பிரதிநிதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


“ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த கடல் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும். அதனைவிடுத்து. ஒரு கட்சியினால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் அழைத்து மீனவர் பிரச்சினையை மழுங்கடித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்திய மீனவர் பிரச்சினை மாத்திரம்தான் வடக்கில் இருக்கிறது என்பதுபோல் காட்ட நினைப்பது வேதனையளிக்கிறது, கவலையளிக்கிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.  


இந்திய மீனவர்கள் நாட்டுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது மாத்திரமன்றி, உள்நாட்டு மீனவர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளும் காணப்படுவதாக கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா சுட்டிக்காட்டியுள்ளார்.


“உள்ளூர் இழுவைமடி தடை செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சுருக்கு வலை குறைந்திருந்தாலும் 2014 ஜனவரி மாதம் அது அதிகரிக்கும். அதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.”


யாழ்ப்பாணத்தில் 150 இற்கும் மேற்பட்ட சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் இருப்பதாக வலியுறுத்திய அன்னலிங்கம் அன்னராசா, அப்பகுதியிலுள்ள ஜனாதிபதியின் பிரதிநிதிக்குத் தெரியப்படுத்திய போதும் எவ்வித பயனும் இல்லை என ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் சுட்டிக்காட்டினார்.


“யாழ்ப்பாணத்தில் 700ற்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகள் காணப்படுகின்றன. 150ற்கும் மேற்பட்ட அனுமதியற்ற பண்ணைகள் இருக்கின்றன. பருத்தித்தீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கடலட்டைப் பண்ணையை அகற்றுமாறு கோரி மாகாண ஆளுநர் அலுவலம், மாவட்ட செயலகம் வரை சென்று போராட்டம் நடத்தி, மகஜர் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இவ்வாறான எங்களுடைய பிரச்சினைகளை பிரஸ்தாபிக்காமல், வெறுமனே இந்திய மீனவர்களால் தான் பாதிப்பு எனக் கூறுவதை ஏற்க முடியாது.”



வட கடலில் இந்திய மீனவர்கள் அத்துமீறுவது மாத்திரம் பிரச்சினை இல்லை Reviewed by வன்னி on January 02, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.