அண்மைய செய்திகள்

recent
-

அத்துமீறி செயல்படும் இந்திய மீனவர்களினால் பாதிக்கப்படும் முல்லைதீவு மீனவர்கள்

 



இந்தியமீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளால், முல்லை மீனவர்களுக்குப் பாதிப்பு; உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மீனவர்கள் வலியுறுத்து.


தற்போது இறால் பிடிக்குரிய பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் பரபரப்பாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இருப்பினும் முன்னைய காலங்களைப்போன்றில்லாமல், தற்போது தமது கடற்றொழில் மந்தமான நிலையிலேயே காணப்படுவதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் அங்கலாய்க்கின்றனர்.


எனவே தற்போது நாட்டில் நிலவும் பொருளாதாரச் சுமையில் தம்மால் அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்கு பெருத்த  இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளாதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்து, இழுவை மடிளைப்பயன்படுத்தி கடல்வளத்தினை அழிப்பதனாலேயே தமது தொழில் நிலைகள் மந்தமாகக்காணப்படுவதாக மீனவர்கள் இதன்போது சுட்டிக்காட்டுகின்றனர்.


அத்துமீறி முல்லைத்தீவுக் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய இழுவைப்படகுகளுடைய இழுவைமடித்தொழிலால் மீன்குஞ்சுகள் அழிக்கப்படுவதுடன், கடல் உயிரிகளின் வாழிடங்களும் அழிக்கப்பட்டு, கடல்வளம் முற்றாகச் சூறையாடப்படுவதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


அத்தோடு இவ்வாறு அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் இழுவைமடித் தொழிலால் கடல் வளத்தினை அழிப்பதோடு, போதைப்பொருள் கடத்தல்களிலும் ஈடுபட்டு எமது நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாகவும் இதன்போது முல்லைத்தீவு மீனவர்களால் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டது.


அதேவேளை அத்துமீறி இலங்கைக்கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் கைதிற்கு எதிராக தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆரப்பாட்டங்களிலும், எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் நியாயமில்லை என இதன்போது மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.


இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதைத் தவிர்த்தால் இவ்வாறு கைதுசெய்யவேண்டிய நிலை ஏற்படப்போவதில்லை எனவும், இவ்வாறான எதிர்ப்பு ஆரப்பாட்டங்களில் எவ்வித அர்த்தமும் இல்லை எனவும் முல்லை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


அதேவேளை இத்தகைய சூழலில் கச்சதீவினைக் கோருவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு விடயம் இல்லை எனவும் முல்லைத்தீவு மீனவகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையினைக் கட்டுப்படுத்தி தமது வாழ்வாதாரத்தையும், கடல்வளத்தையும் பாதுகாக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மீனவர்களால் இதன்போது கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.


குறிப்பாக கடந்த பெப்ரவரி (16)ஆம் திகதியன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் மீனவர்களால் உரிய அதாகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.


இதன்போது முல்லைத்தீவுமாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் கா.மோகனகுமார் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறு அத்துமீீறி முல்லைத்தீவுக் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்து, அவர்களுடைய இழுவைப் படகுகளையும் கைப்பற்றி கரைக்கு கொண்டுவந்தாலேயே தம்மால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரமுடியுமெனவும் தெரிவித்திருந்தார்.


அதேவேளை அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டச்செயலாளர் உமாமகேஸ்வரன் கருத்துத்தெரிவிக்கையில்,  பெப்ரவரி மாத இறுதிப்பகுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் கடற்றொழில் அமைச்சர், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், உரிய அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீன்பிடியுடன் தொடர்புடைய அனைவரும் ஒன்றுகூடி, இந்த இந்திய இழுவைப்படகுப் பிணக்கு உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





அத்துமீறி செயல்படும் இந்திய மீனவர்களினால் பாதிக்கப்படும் முல்லைதீவு மீனவர்கள் Reviewed by Author on February 22, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.