முடிந்தால் அடுத்த தேர்தலில் வென்று காட்டுங்கள் எதிர்கட்சிகளுக்கு பகிரங்க சவால் விடுத்த அமைச்சர்
ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும். முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலில் வென்று காட்டுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சவால் விடுக்கிறேன் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் ,சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த திட்டமிடுவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.அவ்வாறெனில் ஏன் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு தயாராகின்றன? என்பதை நான் கேட்க விரும்புகின்றேன்.
எவ்வாறெனினும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெறும்.அதனை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.போது முடிந்தால் அதில் வெற்றிபெற்று காட்டுமாறு எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கின்றேன்.
இம்முறை தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களைக் காப்பாற்றி, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப செயற்படும் தலைவரைத் தவிர வேறு தலைவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன். மக்களை ஏமாற்றி போலித் தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் மத்திய வங்கியின் உயரதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் அந்த விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா மட்டுமே சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டு மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மட்டும் இந்தளவு பாரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
சட்டங்கள், நியதிகள் எவ்வாறு இருந்தாலும் நாட்டின் தற்போதைய நிலையில் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
இன்னும் சில மாதங்களில் மின்சாரக் கட்டணம் குறைவடையும். அதனைத் தொடர்ந்து எமது பொருளாதாரம் பலமடைந்து கிராமங்கள் அபிவிருத்தியடையும் என்றார்.
No comments:
Post a Comment