காங்கேசன்துறையில் தமிழர்களின் காணியை அளவிடும் முயற்சி தடுத்து நிறுத்தம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட தமிழர்களின் தனியார் காணிகளை அளவீடு செய்யும் முயற்சி காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினால் தோல்வியடைந்துள்ளது.
இன்றைய தினம் (மார்ச் 26) அப்பகுதியில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை அளக்க நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் வந்தபோது, தமது காணிகளை அளப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காணி உரிமையாளர்கள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகளிடம் கடிதம் ஒன்றையும் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நகர அபிவிருத்திக்காக தமது காணிகளை கையகப்படுத்துவதற்காக நில அளவை திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்ய முயற்சிப்பதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காணி உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பினால், நில அளவை திணைக்கள அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியை மேற்கொள்ளாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
2010-2015 காலப்பகுதியில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் 29 ஏக்கர் காணி காணப்படுவதாகவும், அரசாங்கத்திற்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில் கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் 17 ஏக்கர் தமிழர்களுக்குச் சொந்தமான காணி உறுதி கொண்ட தனியார் காணி என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
1990ஆம் ஆண்டு வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக காணி உரிமையாளர்கள் காணிகளை விட்டுச் சென்ற போது குறித்த காணி அரச பாதுகாப்புப் படையினரால் சுவீகரிக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த காணிகள் தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான 12 ஏக்கர் முதலில் SLIIT தனியார் பல்கலைக்கழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும், தமிழ் மக்களுக்கு சொந்தமான எஞ்சிய 17 ஏக்கரை SLIIT நிறுவனத்திக்கு காணி உரிமையாளர்கள் வருமானம் பெறும் வகையில் குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் கடந்த டிசம்பர் மாதம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
No comments:
Post a Comment