ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்புடைய மற்றொரு இலங்கையர் கைது
ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பகுதியில் வைத்து குறித்த நபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான மொஹமட் நஃப்ரான், பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரியான பொட்டா நௌபரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்களை விசாரிப்பதற்காக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அறிவுறுத்தலுக்கு அமைய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அடங்களாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை இந்தக் குழு கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த நால்வரும் தொடர்புகளை வைத்திருந்த இலங்கையர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த நால்வருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நபர் மாளிகாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவினருக்கு விமான பயண்ச்சீட்டுகளை விநியோகித்தமை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை புரிந்தவர் இவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment