சிறிதரனை பார்த்து திருந்துங்கள் சங்கின் வெற்றி இனத்தின் வெற்றி...ஜனாதிபதி வேட்பாளர் அரியனேந்திரன் தெரிவிப்பு.
சிறிதரனை பார்த்து திருந்துங்கள் சங்கின் வெற்றி இனத்தின் வெற்றி...ஜனாதிபதி வேட்பாளர் அரியனேந்திரன் தெரிவிப்பு.
தமிழரசு கட்சியில் பெரும்பாலானவர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சிலர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை பார்த்து திருந்த வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பாக்கிய செல்வம் அரியனேந்திரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ் மருதனார் மடப்பகுதியில் இடம்பெற்ற பொது வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழரசு கட்சியில் உள்ள எவரையும் வாக்களிக்குமாறு கோரவில்லை .
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தானாக முன்வந்து பொது வேட்பாளரான எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
எனக்குத் தெரியும் தமிழரசு கட்சியில் உள்ள பலர் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றனர் சிலர் அதற்கு உடன்பாடு இல்லை உடன்பாடு இல்லாதவர்கள் சிறிதரனைப் பார்த்தாவது திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் ஜனாதிபதி ஆகப் போவதில்லை என்பது எனக்குத் தெரிந்த விடயம் ஆனால் சிறிலங்கா ஜனாதிபதிக்கு பொது வேட்பாளர் பல செய்திகளை கூறுவார் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இருக்கிறது.
நான் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு பிரச்சார நடவடிக்கை களுக்காக சென்றுகொண்டிருக்கும் நிலையில் வர்த்தகர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் சாதாரண மக்கள் என்னை சந்தித்தபோது பொது வேட்பாளரின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேசுகிறார்கள்.
நான் அவர்களிடம் ஒன்றைக் கூறினேன் எனது பெயருக்காகவோ அல்லது சின்னத்துக்காகவோ வாக்களிக்க வேண்டாம் மக்களின் ஒற்றுமையான கோரிக்கையை சிங்கள தேசத்திற்கு காட்டுவதற்காக வாக்களியுங்கள் எனக் கூறினேன்.
ஆகவே தமிழ் பொது வேட்பாளரின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக தெற்குக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டுவதற்காக மக்கள் அணி திரண்டு சங்கு சின்னத்துக்கு வாக்களித்து இனத்தின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

No comments:
Post a Comment