உலக சுகாதார தினம் இன்று
உலக சுகாதார தினம் இன்று (07) அனுஷ்டிக்கப்படுகிறது. 'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக சுகாதார தினம் நினைவுகூறப்படுகிறது.
உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் சுகாதார உரிமைகள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. அத்துடன் சுகாதார உரிமைகளை வென்றெடுப்பதிலும் பல சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
உயிரிழப்புகள் மற்றும் அங்கவீனம் போன்றவற்றிற்கு நோய்கள் உட்பட இயற்கை அனர்த்தங்களும் காரணமாக அமைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் இடம்பெற்று வரும் மோதல்கள் வாழ்வியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் உயிரிழப்பு, வலி, பட்டினி , உளவியல் துயரங்களை அதிகரித்துள்ளன.
அது மாத்திரமன்றி பொருளாதார முன்னேற்றங்கள் கண்டுள்ள நாடுகள் மேற்கொள்ளும் படிம எரிபொருட்களின் பயன்பாட்டில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் காலநிலை அனர்த்தங்களும் உக்கிரமடைந்துள்ளன.
இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சுவாச ரீதியான பல நோய்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கைகோர்த்துள்ள நாடுகள் ஆரோக்கியமான சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளன. எவ்வாறெனினும் சுகாதார உரிமையை உறுதி செய்யும் சட்டங்கள் பல நாடுகளில் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த சவால்களை கவனத்திற்கொண்டு இம்முறை உலக சுகாதார தினம் 'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலக சுகாதார தினம் இன்று
Reviewed by Vijithan
on
April 07, 2025
Rating:

No comments:
Post a Comment