இலங்கையில் இணையக் குற்றங்களில் எண்ணிக்கை அதிகரிப்பு – ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்
இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சமூக ஊடகங்கள் தொடர்பான 6,512 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளில் 1198 முறைப்பாடுகள் நிதி மோசடியுடன் தொடர்புடையது எனஇலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
மிகவும் பொதுவான முறைப்பாடுகளில் போலி பேஸ்புக் கணக்குகள் மூலம் செய்யப்படும் குற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்லைன் பாலியல் துன்புறுத்தல், அவதூறு மற்றும் வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் சம்பவங்கள் ஆகியவையும் முறைப்பாடுகளில் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய குற்றங்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலையும், சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும் போது அதிக விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையின் அவசியத்தையும் இந்த புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
பயனர்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஒன்லைனில் மோசடி நடவடிக்கைகள் மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கவும் இந்த தரவுகள் வலியுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment