உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,
“தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணத்தில். தமிழ்ப் பண்பாட்டு வழி உலகளாவிய தமிழர்களை ஒருங்கிணைப்பதையும் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழர் இன மேம்பாடு ஆகியவற்றுக்குப் பாடுபடுவதையும் நோக்கமாகக் கொண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் (உ த ப இ) 1974 ஆம் ஆண்டில் ஆவணஞானி குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களால் தோற்றுவிக்கப் பெற்றது.
பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளைக் கொண்டு, கடந்த 50 ஆண்டுகளாகத் தொய்வின்றித் தொடர்ந்து தமிழ் தமிழர் மேம்பாட்டுப் பணிகளை ஆற்றி வருகின்ற இவ்வியக்கம் அண்மையில் சென்னையில் பொன்விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது.
பொதுவாகத் தமிழ்மொழி வளர்ச்சியிலும் தமிழர் இன முன்னேற்றப் பணிகளிலும், சிறப்பாகத் தமிழ்த் தொழிலாளர்களின் மேம்பாட்டுப் பணிகளிலும் தாங்கள் தொடர்ந்து தொண்டாற்றி வருவது போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
எண்ணற்ற தமிழர்களின் வாழ்வில் ஒளி பாய்ச்சிய பல சாதனைகளைப் புரிந்துள்ள தங்களை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக இருந்து எங்களை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் செயலவைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
எங்களின் அன்பான இவ்வேண்டுகோளை ஏற்று, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராகத் தாங்கள் தொண்டாற்ற வேண்டும் எனக் கனிவுடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.”
என இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]() |
.jpg)
No comments:
Post a Comment