மீனவ சமூகத்திற்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் மீனவ சமூகத்திற்காக 'மீனவர் ஓய்வூதியத் திட்டம்' ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பல விசேட நன்மைகள் கிடைக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே குறித்த திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக தவணைக்கட்டணங்களைச் செலுத்தி முடித்த பின்னர், 60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்படும்.
75% தவணைக்கட்டணத்தைச் செலுத்தியுள்ள சந்தாதாரர்களுக்கு, ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படாமல், அவர்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப 60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
25% முதல் 75% வரை சந்தா செலுத்தியுள்ள சந்தர்ப்பத்தில், செலுத்திய முழுத் தொகையையும் அதற்கான வட்டியுடன் பெற்றுக்கொள்ளும் வசதி இத்திட்டத்தில் உள்ளது.
அதேநேரம் ஓய்வூதியம் பெறுவதற்கு முன் பகுதி ஊனம் ஏற்பட்டால் பணிக்கொடை அல்லது ஓய்வூதியம் வழங்கும் நேரத்தில் மாதாந்த ஓய்வூதியத்தைப் பெறும் வசதி உண்டு.
நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அதிகபட்சம் 50,000 ரூபா வரை பணிக்கொடையை ஒரே தடவையிலோ அல்லது தவணை முறையிலோ பெற்றுக்கொள்ளலாம்.
ஓய்வூதியம் பெறுவதற்கு முன் விபத்து காரணமாக உயிரிழந்தால், ஒரு வருடத்தின் பின்னர் வாரிசுதாரருக்கு முழு சந்தாத் தொகையும் அதற்கான வட்டியுடன் வழங்கப்படும்.
தவணைக்கட்டணம் செலுத்தத் தவறிய சந்தர்ப்பங்களில், நிலுவைத் தொகையையும் வட்டியையும் செலுத்தி காப்புறுதிப் பத்திரத்தை மீண்டும் செல்லுபடியாக்கிப் கொள்ளலாம்.
ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் போது சந்தாதாரர் உயிரிழந்தால், அவருக்கு 80 வயது பூர்த்தியாகும் காலம் வரை அவரது வாழ்க்கைத் துணைக்கு (கணவன்/மனைவி) மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்படும் அல்லது மீதமுள்ள தொகையை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த மீனவர் ஓய்வூதியத் திட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் கடந்த 22 ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீனவ சமூகத்திற்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
Reviewed by Vijithan
on
November 24, 2025
Rating:
Reviewed by Vijithan
on
November 24, 2025
Rating:


No comments:
Post a Comment