புதிய அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இது வரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை . மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை
புதிய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும்,இ போதைவஸ்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன. ஆயினும் தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இந்த அரசாங்கம் இது வரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இறைவனின் இரக்கத்தாலும், புனித ஆட்சி பீடத்தின் ஆதரவாலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மறைமாவட்ட இறைமக்களுக்கு எழுதும்,திருவருகைக் காலத் திருமடல் - 2025 இல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மடலில் மேலும் குறிப்பிடுகையில்,,,
திருவருகைக்காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகிறது. இயேசுவின் பிர சன்னத்தை –உடனிருப்பை ஆழமாக உணர்கின்ற ஒரு சிறப்பான சந்தர்ப்பம் இந்தத் திருவருகைக்காலம். 'கடவுள் நம்மோடு இருக்கிறார்' என்ற ஆறுதலின் செய்தியை தனது திரு பிறப்பின் மூலம் இறைமகன் இயேசு மீளவும் இந்நாட்களில் நமக்கு வலியுறுத்துகின்றார்.
எனவே கடவுளின் உடன் இருப்பையும், அவருடைய அளவுகடந்த அன்பையும் இன்னும் ஆழமாக இந்தக் காலத்தில் உணர்ந்து, இறைமகன் இயேசுவின் வருகைக்கு நம்மை தகுந்த முறையில் ஆயத்தம் செய்வோம்.
மன்னார் மறைமாவட்ட மேய்ப்பு பணி மாநாடு
ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்ட மேய்ப்பு பணி மாநாடு இவ்வாண்டும் கடந்த ஒக்ரோபர் மாதம் 27, 28, 29 ஆகிய தினங்களில் மன்னாரில் சிறப்பாக நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டு மன்னார் மறை மாவட்டத்தில் 'தூய ஆவியின் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூய ஆவியை மையப்பொருளாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என ஏறக்குறைய 200 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பங்குகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. தீர்மானங்களை அடியொற்றி ஒவ்வொரு பங்கும், ஆணைக்குழுவும், துறவற இல்லமும் தமது சூழ்நிலை, வசதி, வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு தமக்கான பிரத்தியேகமான மேய்ப்புப்பணி திட்டங்களைத் தீட்ட வேண்டும்.
இந்த மாநாட்டின்போது பங்குகள் ரீதியாக எடுக்கப்படும் தீர்மானங்களையும் உள்ளடக்கியதாக பங்குமட்ட இறுதித் தீர்மானங்கள் அமைய வேண்டும். புதிய ஆண்டின் முதல் நாளில் இருந்து புதிய ஆண்டுக்கான மேய்ப்புப்பணி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மறைமாவட்டம் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள்
மன்னார் மறை மாவட்டத்தில் காற்றாலைகளை அமைக்கும் திட்டமும் கனிய மணல் அகழ்வு திட்டமும் பாரிய பிரச்சினைகளாக உள்ளன. மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாடிகளோடு மேலும் 14 காற்றாடிகள் அமைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
ஆயினும் இனி வரும் காலங்களில் மேலதிகமாக காற்றாடிகள் அமைக்கப்பட மாட்டாது என்ற உறுதிப்பாட்டை அமைச்சரவைத் தீர்மானமாக நிறைவேற்றி அரசாங்கம் தந்துள்ளது. எனவே இதனையொட்டி மன்னாரில் இடம் பெற்றுவந்த மக்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
கனிய மணல் அகழ்வு மன்னார் தீவில் முற்றாக இடம்பெறாது என்ற வாக்குறுதியையும் அரசாங்கம் தந்திருக்கின்றது. கனிய மண் அகழ்வுக்கு நிறுவனங்களின் அலுவலகங்கள் மன்னாரில் இயங்க முடியாது எனவும், கனிய மணல் அகழ்வு ஒருபோதும் நடை பெறாது எனவும் அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றவும் அரசு வாக்குறுதி தந்துள்ளது. அரசு மக்களுக்கு கொடுத்த இந்த வாக்குறுதியை தவறாமல் நிறை வேற்றும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
வரலாறு காணாத வெள்ள அனர்த்தம்
முழு இலங்கை நாட்டையும் உலுக்கிய வெள்ள அனர்த்தம் நம்முடைய மறைமாவட்டத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. நம் மக்களில் சிலர் தம் இன்னுயிரை இழந்துள்ளனர். பலர் அகதிகளாக்கப் பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து எண்ணில்லாத பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான விளைநிலங்கள் அழிவுக்குள்ளாகி உள்ளன. கால்நடைகள் பல இறந்துள்ளன. இந்நிலையில் நிவாரண நடவடிக்கைகள் அரசினாலும் நம் மறைமாவட்ட திருச்சபையாலும் ஏனைய சில பொது அமைப்புகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிப்புக்கு உள்ளாகாத மக்கள் பெருந்தன்மையோடு உதவிக் கரம் நீட்டி, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நாட்டின் இன்றைய சூழ்நிலை
பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள புதிய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன.
ஆயினும் தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இந்த அரசாங்கம் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
எனவே இந்தச் சூழ்நிலையில் தமிழர் நலன் சார்ந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புக்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து பற்றுறுதியோடு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறித்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இறை மடலானது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் காலை திருப்பலியின் போது மக்களுக்கு வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
December 07, 2025
Rating:




No comments:
Post a Comment