மன்னார் நகரசபை பெண் உறுப்பினர் மீது சட்டவிரோத கட்டட குற்றச்சாட்டு – நகர முதல்வரின் மௌனம் கேள்விக்குறி
மன்னார் நகரசபையின் ஒரு பெண் நகரசபை உறுப்பினர், சட்ட விதிமுறைகளுக்கு முரணாகவும், அயல் வீட்டாருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், எந்தவித அனுமதியும் பெறாமல் கட்டடம் ஒன்றை நிர்மாணித்து வருவதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறித்த கட்டடம், மன்னார் நகர முதல்வரின் அரசியல் ஆதரவுடன் கட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அயல் வீட்டுக்காரர், சுற்றுப்புறச் சூழல் அதிகாரசபை, நகர முதல்வர், நகரசபை மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுமான இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, தேவையான அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என்பதனை உறுதி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, உரிய அனுமதி பெறும் வரை கட்டட பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், அந்த உத்தரவுகளை மன்னார் நகரசபை பெண் உறுப்பினர் பொருட்படுத்தாமல்,
“நான் அனுமதிக்கு விண்ணப்பம் செய்துள்ளேன். நகர முதல்வர் கட்டடத்தை தொடருமாறு கூறினார்”
என தெரிவித்துக் கொண்டு, கட்டுமான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சட்டத்தை மதிக்காமல் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நகரசபை உறுப்பினரை நகர முதல்வர் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என பொது மக்கள் கடும் கேள்விகளை எழுப்புகின்றனர்.
மேலும்,
• பொது மக்களுக்கு ஒரு சட்டமா?
• நகரசபை உறுப்பினர்களுக்கு வேறு ஒரு சட்டமா?
• சில முறையற்ற தீர்மானங்களுக்கு இந்த பெண் நகரசபை உறுப்பினர் ஆதரவு வழங்குவதற்காகவே நகர முதல்வர் மௌனம் காக்கிறாரா?
என்றும் கேள்வி எழுகின்றது
Reviewed by Vijithan
on
January 12, 2026
Rating:




No comments:
Post a Comment