சுவிற்சர்லாந்தில் “ராதா நடனாலய” மாணவியும் மருத்துவருமான மரியசைனா அவர்களின் நடன அரங்கேற்றம்
தாயகத்தின் யாழ்ப்பாண மாவட்டம் கரையூர் குருநகரை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து சூரிச் நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு.திருமதி.அன்ரனி யூலியட் தம்பதிகளின் செல்வப் புதல்வியும் ராதா நடனாலய அதிபர் முதுகலைமாணி திருமதி.ஞானசுந்சரி வாசன் அவர்களின் மாணவியுமான பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் ஆசிரியை, மருத்துவர் செல்வி மரியசைனா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 24.01.2026 சனிக்கிழமை அன்று Mehrzweckhalle, Wylandhalle Dorfstrasse 41, 8444 Henggart எனும் இடத்தில் பெருந்திரளானோர் மத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. கல்வியோடு கலையையும் பட்டிமன்றப் பேச்சையும் தமிழ்மொழி கற்பித்தலையும் முனைப்போடு பற்றிப் பிடித்து பயணித்துவரும் மருத்துவர் செல்வி.அன்ரனி மரியசைனா அவர்களின் நடன அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக பிரான்ஸ் நர்த்தனாலய அதிபர் பரதசூடாமணி திரு.தயாள சிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக நோர்வே சலங்கை நர்த்தனாலய இயக்குனர் பரத சூடாமணி, கலையியல் நிறைஞர் திருமதி.மேரி மாகிறேற் சூசை அவர்களும் கௌரவ விருந்தினராக சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த படைப்பாளி எழுத்தாளர் திரு.து.திலக் (கிரி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்ப நிகழ்வாக மண்டப நுழைவாயிலில் மங்கல விளக்கினை பெற்றோர் திரு.திருமதி. அன்ரனி யூலியட், முதுகலைமாணி திருமதி.ஞானசுந்தரி வாசன், விழாவிற்கான விருந்தினர்கள் ஆகியோரும் ஏற்றியதைத் தொடர்ந்து நிகழ்வரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாச் சுடர்களை விருந்தினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், நடனப் பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள் என பலர் ஏற்றிவைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து அரங்கில் வணபிதா பெயர்ட் அல்வர் ஆசியுரை வழங்கினார். நடராஜப் பெருமானுக்குரிய பூசை வழிபாடுகளோடு ஆசியினையும் சூரிச் சிவன் ஆலய பிரதம குரு சிவசிஶ்ரீ கைலாசநாதக் குருக்கள் வழங்கினார். தொடர்ந்து வரவேற்புரையினை மரியசைனாவின் தாயார் திருமதி.அனரனி யூலியட் வழங்கினார்.
மரியசைனா அவர்களின் அரங்கேற்றம் புஸ்பாஞ்சலியுடன் ஆரம்பமாகி தொடர்ந்து அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், பதவர்ணம், கீர்த்தனம், பதம், சாபவிமோர்சனம், தாயக நினைவு, தில்லானா, மங்களம் ஆகிய உருப்படிகள் அரங்கேற்றப்பட்டன. இவ் உருப்படிகளுக்கான அணிசேர் கலைஞர்களாக…
* நட்டுவாங்கம் - திருமதி.ஞானசுந்தரி வாசன்
* வாய்ப்பாட்டு - திரு.ஶ்ரீ அருண் கோபினத்
* வயலின் - திரு.ஈஸ்வர் ராமகிருஷ்ணன்
* மிருதங்கம் - கலாநிதி திரு.கே.எஸ்.பவானி சங்கர்
* சுரத்தட்டு - செல்வன்.மதுவந் மகேஸ்வரன்
ஆகியோர் சிறந்தமுறையில் அணியிசை வழங்கினர்.
விருத்தினர் உரைகளைத் தொடர்ந்து மரியசைனாவின் குருவும், ராதா நடனாலய அதிபருமான முதுகலைமாணி ஞானசுந்தரி வாசன் மரியசைனாவிற்கு மனம் நிறைந்த ஆசியினையும் வாழ்த்துகளையும் வழங்கியதோடு “நர்த்தனச்செல்வி” எனும் விருது வழங்கி மதிப்பளித்தார். அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகம், இன்பத்தமிழ் பட்டிமன்றப் குழுமம், வின்ரத்தூர் தமிழ்ப் பள்ளி, தமிழ்மக்கள் ஒன்றியம், மரியசைனாவின் உறவினர்கள் என பலரும் நினைவுப் பரிசில்களை வழங்கி மதிப்பளித்து வாழ்த்தினர். நன்றியுரையினை மருத்துவரான நர்த்தனச்செல்வி மரியசைனா அன்ரனி வழங்கினார்.
சிறப்பான ஒலி, ஒளி அமைப்புகளோடு நடைபெற்ற நிகழ்வை சிறந்த முறையில் எஸ்.கவிதரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
சுவிற்சர்லாந்திலிருந்து
து.திலகன்
Reviewed by Vijithan
on
February 07, 2026
Rating:


.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment