இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள ஒரு பழங்கால ஆலயத்தை விடுவிக்க வடக்கிலிருந்து கோரிக்கை
வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள, சுமார் இரண்டு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் மீண்டும் ஒருமுறை பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
தனியார் காணி ஊடாக ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்ல இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியை அகலப்படுத்தும் முயற்சி, உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பினை அடுத்து இராணுவத்தால் கைவிடப்பட்டுள்ளது.
இராஜேஸ்வரி அம்மன் கோயிலும் அதன் சுற்றுப்புறப் பகுதியும் ஜூன் 15, 1990 அன்று உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டது. மே 2002 முதல், விசேட அனுமதியின் பின்னர், ஒரு சிலருக்கு மாத்திரம் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
போர் தீவிரமடைந்ததால், ஜூன் 2006 இல் அந்த அனுமதியும் நிறுத்தப்பட்டதோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக உள்ளூர்வாசிகளுடன் கோயிலுக்குச் சென்றார்.
பெப்ரவரி 3, 2015, மகா சிவராத்திரி முதல், இராணுவ அனுமதி பெற்றவர்கள் மாத்திரமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக, ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகக் குழு கூறுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், ஜூன் 24, 2023 அன்று வடக்கில் 234 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை ஒட்டி, சைவர்கள் மீண்டும் ஆலயத்தில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். எனினும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை என்ற நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, விவசாய நிலங்கள் உட்பட தமிழ் மக்களின் தனியார் காணிகளில் ஆலயத்திற்குச் செல்வதற்கான தற்காலிக பாதை அமைக்கப்பட்டதாக பிரதேசத்தின் குடிமக்கள சமூக அமைப்புப் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.
கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையையும் அதைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தையும் இராணுவம் இன்னும் கட்டுப்பாட்டில் அவைத்துள்ளதாகவும், தமிழ் மக்களின் தனியார் நிலங்கள் வழியாக கோயிலுக்குச் செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்றும் நோக்கத்துடன் பெப்ரவரி 16 ஆம் திகதி பணியை ஆரம்பித்த இராணுவம், உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பையடுத்து கைவிட்டதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவிக்கின்றார்.
இராணுவத்தின் முயற்சிகள் குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதேச சபைத் தலைவர், கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதைக்கு அருகில் தற்போது இராணுவ முகாம் இல்லாவிட்டாலும், இராணுவ வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இன்னும் அந்த இடத்தில் காணப்படுவதாகவும் வலியுறுத்துகிறார்.
வாகன பழுதுபார்க்கும் நிலையத்தை உடனடியாக அகற்றவும், இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பழைய வீதியை பக்தர்களுக்காகத் திறக்கவும், கோயிலுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறும் பிரதேசத்தின் தமிழ் சைவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் வழியாக இராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீதிக்கு பதிலாக, கோயிலுக்கு செல்லும் பழைய வீதியை விடுவிக்க வேண்டுமென வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ரொசாந்த்குமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
"மக்களின் காணியில் பாதி இராணுவத்தின் கீழ் உள்ளது. அவர்கள் இந்த விவசாய காணிகள் வழியாக ஒரு வீதியை அமைத்து, மக்கள் அதை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கின்றனர், இது கோவிலுக்கு செல்லும் பழைய வீதி விடுவிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகும். அதாவது அவர்கள் வீதியை மாற்றுகிறார்கள். அவர்கள் இந்த தற்காலிக வீதியை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் பழைய வீதியை கோருகின்றனர். பழைய வீதியை நிச்சயமாக விடுவிக்க வேண்டும்."
இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியால் சில தனியார் காணிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக பொது பிரதிநிதிகள் கூறுகின்றனர். மேலும், தற்காலிக வீதியை நிரந்தரமாக மாறினால், மக்கள் தமது காணி மீதான உரிமையை இழக்க நேரிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்
Reviewed by Vijithan
on
February 27, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment