மன்னார்–புத்தளம் பிரதான பாதை மூடப்பட்டால் பேரழிவு உறுதி – NPP அரசுக்கு கடும் எச்சரிக்கை
100 வருடம் பழமை வாய்ந்த புத்தளம் மன்னார் பாதையை திறந்து மக்களுக்கு இலகுபடுத்தி கொடுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் அரசுக்கு பாராளுமன்றில் வேண்டுகோளினை முன்வைத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த தேர்தல்களின் போது மன்னாருக்கு வேட்பாளராக வந்த ஜனாதிபதி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பாதையை திறந்து மக்களுக்கு வசதி செய்து கொடுப்பதாக கூறினார்.
இந்த அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கின்ற விமல் ரத்நாயக்க தொடர்பில் எம்மிடத்தில் மதிப்பிருந்தது,ஆனால் இன்று அவரது பதில் அதை உடைத்து எரிந்துவிட்டது.
இந்த அரசு கொண்டு வருகின்ற அனைத்து நல்ல விடயங்களையும் நாங்கள் நேர்மையுடன் பார்த்து வந்துள்ளதுடன்,அதற்கு எதிராக பாராளுமன்றில் நாம் பேசியதில்லை.
ஆனால் துரதிஷ்டம் தற்போது தான் புரிகிறது இந்த அரசும்,ஜனாதிபதியும்,அமைச்சர்களும்,இவர்களுக்கு கீழ் வருகின்ற இரண்டு நிறுவனங்களும் இந்த புத்தளம் – மன்னார் பாதையிினை நிரந்தமாக மூடுவதற்க எடுத்துள்ள நடவடிக்கைகள்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச,மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த பாதை திறப்பது தொடர்பில் தூர நோக்கு சிந்தணையுடன் செயற்பட்டனர்.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் இது இழுத்து மூடப்பட்டது.அன்று வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வனவிலங்கு திணைக்களம் என்பன மக்களின் பக்கம் நின்று இந்த பாதை மக்களுக்கு பயணத்திற்காக வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருந்தார்கள்.
ஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் அவர்கள் வெளிநாட்டு நிதிகளை அண்டி வாழும் அமைப்புக்களுடன் இணைந்து இந்த பாதையை நிரந்தரமாக மூட ஒத்துழைப்பு நல்குவது பெறும் துரோகமும்,அநியாயமாகும்.
இந்த பாதையானது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.மாறாக தமிழர்களுக்கும்,அது போன்று அனைவருக்கும் பொதுவானது.அதனை திறப்பதன் மூலம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் அனைவருக்கும் 100 கிலோமீட்டர் குறைந்த தூரத்தை கொண்டதாக இருப்பது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் இது முக்கியமானதாகும்.
அன்று நான் அமைச்சராக இருந்த போது எடுத்த முயற்சியால் இந்த பாதையினை திறந்து மக்களுக்கு பயண வசதிகள் செய்து கொடுத்தோம்.அப்போது கூட சில பெரும்பான்மை இனவாதத்தை கொண்ட சிலர் இதற்கெதிராக செயற்பட்டது மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள பெரும்பான்மை ஊடகங்களும் இந்த பாதையினை மையப்படுத்தி பல்வேறு இனவாத கருத்துக்களை விதைத்தனர்.
வடக்கில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,மன்னார் காற்றாலை மின்சாரத்தை அமைக்க ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பை அடுத்து எம்மையும்,மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் அழைத்து இந்த திட்டத்தை மட்டும் நடை முறைப்படுத்த உதவுமாறு வேண்டினார்
அப்போதும் நாங்கள் தெளிவாக சொன்னோம்.மக்களின் விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியாது என்று கூறியதுடன்,மன்னார் – புத்தளம் பாதையினை திறந்து மக்களது அத்தியாவசிய தேவையை செய்து கொடுங்கள் என்று வலியுறுத்தினோம்.
78 வது இலங்கையின் சுதந்திரத்தை அரசு கொண்டாடிய போது வடக்கிலும்,கிழக்கிலும் வாழும் மக்கள் இன்றைய தினத்தை கரிநாளாக கொண்டாடியதோடு,தமது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர்.ஆனால் நாங்கள் உங்களிடம் நாட்டை பிரித்து கொடுங்கள் என்று கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மன்னார் – புத்தளம் பாதை தொடர்பாக வன்னி,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும்,புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இந்த பாதை தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டு இந்த பாதையை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்றும் றிசாத் பதியுதீன் கூறினார்.
கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட அந்த வழக்கின் எதிரிகளோடு சதிகாரர்களோடும் இந்த அரசாங்கம் இணைந்து இந்த பாதையை இழுத்து மூடுவதற்கு எடுக்கும் நடவடிக்கையானது பெரும் அழிவை தோற்றுவிக்கும் என்பதை சபையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றும் தனதுறையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Reviewed by Vijithan
on
February 05, 2026
Rating:


No comments:
Post a Comment