மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை தொடர்ச்சியாக கல்வியில் வீழ்ச்சி-தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபரை நியமிக்க கோரி பாடசாலைக்கு முன் போராட்டம்
மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (30) காலை பாடசாலைக்கு முன் பாடசாலையின் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த சில வருடங்களாக ஆசிரியர் ஒருவர் அதிபராக செயல்படும் நிலையில் பாடசாலை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளதாகவும் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வியின் தரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் வேறு பாடசாலைகளுக்கு செல்வதாகவும் சுட்டிக்காட்டுவதோடு பாடசாலை சூழலில் பல்வேறு பின்னடைவுகளை எதிர் நோக்குவதாகவும் சுட்டிக்காட்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப் பட்டதோடு,குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றக் கோரியும் முதலாம் தர அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்க விட்டால் தமது பிள்ளைகளை உடனடியாக குறித்த பாடசாலையில் இருந்து நிறுத்தப் போவதாகவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த அதிபர் தொடர்பாகவும் அவரை உடனடியாக மாற்றக்கோரியும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோடு, தரம் ஒன்றிற்கான அதிபரை நியமிக்குமாறும் அரச அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை மற்றும் கடிதம் மூலமாகவும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையிலே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்த்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பாடசாலைக்கு முன் போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மன்னார் வலைய கல்வி அலுவலக அதிகாரிகள் வருகை தந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
போராட்டம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் உரிய அதிபரை மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் வலயக்கல்வி அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று வலய கல்விப் பணிப்பாளரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் .
வலயக்கல்வி பணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையை நிறை வேற்றுவதாகவும், அதற்கான கால அவகாசம் தேவை எனவும் தமது அதிகாரத்திற்குள் குறித்த பாடசாலை இல்லை என்பதையும் ஆனால் இதற்கான நடவடிக்கையை தாம் உரிய அதிகாரிகளுடன் பேசி சாதகமானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிப்பதாக தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை தருமாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்று மன்னார் அரசாங்க அதிபருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் இதன் போது தேசிய பாடசாலை மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ள நிலையில் தற்போதைய பாடசாலை அதிபர் கல்வி அமைச்சின் செயலாளரினால் கடந்த பல வருடங்களுக்கு முன்பு நியமிக்கப் பட்டதை சுட்டிக்காட்டியதோடு தற்போதைய பாடசாலையின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு தங்களது போராட்டத்தை கவனத்தில் எடுத்து அதிபரை மாற்றுவதற்கான நடவடிக்கையை முன் னெடுப்பதுடன் பாடசாலை அபிவிருத்தியிலும் கவனம் செலுத்துவதாகவும் இந்த நடவடிக்கைக்காக பத்து நாட்கள் அவகாசத்தை அரசாங்க அதிபர் கோரி தங்களுக்கு சாதகமான பதிலை பெற்று தருவதாக தெரிவித்தார் .
இந்நிலையில் போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்து போராட்டத்தை கைவிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
March 30, 2026
Rating:


.jpeg)




.jpeg)

No comments:
Post a Comment