அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சார பிரச்சினைகள் குறித்து வலுசக்தி பிரதி அமைச்சர் எம்.ஐ.எம்.அர்கம் தலைமையில் விசேட கலந்துரையாடல்.

 மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சாரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் தலைமையில் இடம்பெற்றது.


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த விசேட கலந் துரையாடலில்  இலங்கை மின்சார சபை அதிகாரிகள், காற்றாலை மின் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டத்தின் மின்சார வசதிகள், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக  கலந்துரையாடப்பட்டது.


  குஞ்சுக்குளம் பகுதியில்  வெள்ளத்தால் ஏற்படும் மின்சார அபாயங்களைத் தடுக்கும் வகையில் மின் இணைப்புகளை பாதுகாப்பான முறையில் உயர்த்தி அமைப்பது, சிலாவத்துறை, முருங்கன் மல்வத்து ஓயா பாலம் அருகில் உள்ள மின் கேபிள் களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், தள்ளாடி கடற்கரை வீதியில் வீதி விளக்குகளை அமைப்பது , மடு பிரதேச செயலகப் பிரிவின் சோதி நகர் பகுதியில் மின்சார வசதி அற்ற குடும்பங்களுக்கு இலவச கிராமப்புற மின் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மின்சார இணைப்புகளை வழங்குவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.


மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட  மறுசீரமைக்க தக்க எரிசக்தி திட்டங்கள்  தொடர்பாகவும்,   மன்னார் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய  நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டங்கள் குறித்தும்  கலந்துரையாடப்பட்டது.


அத்துடன், மன்னார் தீவில் தொடர்ந்து ஏற்படும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 


இதேவேளை   வலுசக்தி பிரதி அமைச்சர் எம்.ஐ.எம்.அர்கம்    கருத்து தெரிவிக்கையில்


மன்னார் தீவு பகுதிக்கான வெள்ளக் கட்டுப் பாட்டுத் திட்டத்திற்கு, தற்காலிக மதிப்பீடாக சுமார் 12 கோடி ரூபாய் நிதிக்கு அமைச்சரவை (Cabinet) அனுமதி கிடைத்துள்ளது. 


இது தொடர்பான பணிகள் தாழ் நிலப் பகுதி அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களுக்குள் இது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன், அடுத்தகட்ட கட்டுமானப் பணிகளை தொடர முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம்  தெரிவித்தார்.மேலும் மன்னார் பிராந்தியத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், மன்னார் பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாக வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்க உடன் பட்டுள்ளன. குறிப்பாக, ஆண்டுதோறும் இவ்வாறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. 









இத்திட்டங்களை மன்னார் நகரசபை தலைவர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் இணைந்து முன்னெடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.மன்னார் தீவில் தற்போது சில முக்கிய மின்சக்தி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தம்பபவணி (Thambapavani) காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 20 மெகாவாட் (20 MW) திறனுடைய மின் உற்பத்தித் திட்டம் தற்போது இயங்கி வருகிறது.


 50 மெகாவாட் (50 MW) திறனுடைய மற்றொரு திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானத்தின்படி, வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் திட்ட அறிக்கை மற்றும் பணிகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும் வரை, மன்னார் தீவுக்குள் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


 இருப்பினும், மன்னார் தீவுக்கு வெளியேயான கொண்டாச்சி, முள்ளிக்குளம் போன்ற பகுதிகளில் தற்போது புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டு வருகின்றன.இலங்கையின் கனிம வளங்கள் தொடர்பாக ஒரு புதிய கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 


ஆனால், மன்னார் தீவு அல்லது மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட கனிம வளங்கள் தொடர்பாக இதுவரை எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, சுற்றுச்சூழல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பெறப்பட வேண்டும்.


 மேலும், அப்பகுதி மக்களுடன் கலந்தாலோசித்து, அந்த விவாதங்களின் முடிவுகளின் அடிப்படையில் இறுதி முடிவு எட்டப்படும்.என  வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம்   மேலும் தெரிவித்தார்.





மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சார பிரச்சினைகள் குறித்து வலுசக்தி பிரதி அமைச்சர் எம்.ஐ.எம்.அர்கம் தலைமையில் விசேட கலந்துரையாடல். Reviewed by Vijithan on July 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.