அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரிப்பு

 நாட்டில் HIV வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக விசேட வைத்திய நிபுணர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார். 


சுகாதார அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர், இவர்களில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்தே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவர்களில் பெண்களை விட ஆண்களிடையே இத்தொற்று அதிகமாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதே HIV தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படலாம் எனக் கூறிய வைத்திய நிபுணர், இது தவிர பாதுகாப்பற்ற பாலியல் நடத்தைகள் மற்றும் போதைப்பொருள் ஊசி ஏற்றும் முறைகளின் போது ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் பிற உபகரணங்களை ஒத்ததாகப் பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவையும் இதற்குப் பங்களிப்பதாகக் கூறினார். 

HIV வைரஸ் தொற்றிய பின்னர் அதனை 100% குணப்படுத்த முடியாது என்றும், ஒருவருக்கு HIV தொற்று ஏற்பட்டால் அவர் நீண்டகால மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து பெற வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். 

அதேபோல், சிறு வயதிலேயே ஒருவருக்கு HIV தொற்று ஏற்பட்டால், அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மற்றும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வைத்தியர் இங்கு சுட்டிக்காட்டினார். 

HIV/STI மற்றும் ஹெபடைடிஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியாக பரவும் நோய்களைக் கண்டறிவதற்கும் அவற்றின் பரவலைக் குறைப்பதற்கும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம், ஒரு சிறப்பு முன்னோடித் திட்டமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் தொகை மற்றும் ஆபத்தான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு இது முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். 

இதன்போது, பொதுமக்களிடையே சென்று அவர்களின் விருப்பம் மற்றும் தனியுரிமைக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கும் வகையில் இலவச சேவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அங்கு பரிசோதனை அறிக்கைகளின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் அதேவேளை, ஏதேனும் ஒரு நோய் அல்லது தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை இலவசமாக வழங்குவதற்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார். 

இது குறித்து சமூக விசேட வைத்திய நிபுணர் சத்யா ஹேரத் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

"சில நாடுகளில் HIV அதிகரிக்கிறது, சில நாடுகளில் குறைகிறது. இலங்கையில் HIV பதிவுகள் குறைந்த போக்கைக் கொண்டிருந்தாலும், பதிவுகள் தொடர்ந்து காணப்படுகின்றன. நாங்கள் அறிக்கைகளைப் பார்க்கும்போது, ஒவ்வொரு வருடமும் புதிதாக இணையும் நோயாளர்களின் எண்ணிக்கை பொதுவாக அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காண முடிகிறது. அதாவது 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளைப் பார்க்கும்போது சற்று அதிகமாக இணைகிறார்கள். அந்த அறிக்கைகளின்படி, பெண்களை விட ஆண்களிடையே இது சற்று அதிகமாகக் காணப்படுகிறது. ஆண், பெண் விகிதாசாரப்படி பார்த்தால் இரண்டுமே சமமாக இருக்க வேண்டும். ஆனால் இது ஆண்களிடையே அதிகமாக உள்ளது. சில நேரங்களில் பாதுகாப்பற்ற உடலுறவும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் அதிக மக்கள் வாழும் பகுதிகளாக இருப்பதால், ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இங்கிருந்தே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகிறார்கள்." என்றார்.





நாட்டில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரிப்பு Reviewed by Vijithan on July 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.