அதிகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு!
லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் மீள் நிரப்பல் விலையை 745 ரூபாவினால் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி, முன்னர் 6,740 ரூபாவாக இருந்த 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 5,995 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 2,720 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் 2,398 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.
மத்திய கிழக்கு நிலவும் போர்ச் சூழல் காரணமாக சவூதி அராம்கோ (Saudi Aramco) விலை மற்றும் கப்பற்கட்டணங்கள் உள்ளிட்ட இறக்குமதிச் செலவுகள் அதிகரித்திருந்த போதிலும், கடந்த மூன்று மாதங்களாக விலைத் திருத்தம் மேற்கொள்ளாமல் அந்த நட்டத்தை நிறுவனமே ஏற்று வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தொடர்ந்த ஏற்பட்ட நட்டங்கள் காரணமாக, கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் சிலிண்டர் 6,740 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டர் 1,988 ரூபாவிலிருந்து 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ரூபா 2,720 ஆகவும் உயர்த்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இந்த விலை அதிகரிப்புத் தொடர்பாக விளக்கமளிக்குமாறு நேற்று (16) நுகர்வோர் விவகார அதிகாரசபை லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளை அழைத்திருந்தது.
அங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, உயர்த்தப்பட்ட விலையைக் குறைப்பது குறித்து ஆராய்ந்து அறிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கூடிய நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, தற்போது எரிவாயு விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
Reviewed by Vijithan
on
November 17, 2026
Rating:


No comments:
Post a Comment