தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளும் தகட்டு இலக்கங்களும்
மனித உரிமை மீறல் வழக்கொன்றினை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பதற்கான ஒரு பரிசோதனையாகவே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மாறியுள்ளதாக சர்வதேச அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
“நிலைமாறு கால நீதி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக வாக்குறுதி வழங்கும் நிலையில், இராணுவம் ஈடுபட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல் வழக்கொன்றினை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பதற்கான ஒரு பரிசோதனையாகவே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மாறியுள்ளது.” என தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) குறிப்பிட்டுள்ளது.
பல தசாப்த்தங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் உள்ள ஒரு பாரிய மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டிருந்த பல விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது சடலங்கள் எனக் கூறப்படும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதானது இலங்கையிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் பாரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் நவம்பர் 13, 2023 அன்று, வெளியிட்ட பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போன்று இலங்கையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளில் பெரும் பிரச்சினைகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் பாரிய மனித புதைகுழிகள் தொடர்பிலான அகழ்வில் ஈடுபடும் நிபுணர்களுக்கு உதவும் வகையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்படுவதாகவும், இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடைகள் மற்றும் அடையாளத் தகடுகள் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடைகள் மற்றும் அடையாளத் தகடுகள் தொடர்பானதே இந்த சிறு அறிக்கை. தற்போதும் எதிர்காலத்திலும் சிறிலங்காவின் பாரிய மனிதப் புதைகுழிகளை அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வல்லுனர்களுக்கு உதவியாக இருக்கும் என்னும் நம்பிக்கையிலேயே இது வெளியிடப்படுகின்றது.”
சுவிற்சர்லாந்து, நோர்வே, பிரான்ஸ், இலங்கை மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் (ஆண், பெண்) போராளிகள் 25 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டத்தின் முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://itjpsl.com/assets/ TAMIL-FINAL-LTTE-Uniforms-and- dog-tag-numbers.pdf
https://itjpsl.com/assets/
தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளும் தகட்டு இலக்கங்களும்
Reviewed by Author
on
November 15, 2023
Rating:

No comments:
Post a Comment