மன்னார், முள்ளிக்குளம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யக் கோரி பேரணி
இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களை அங்கு மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி செவ்வாய்கிழமையன்று மன்னாரில் பேரணி ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.மன்னார் ஆயர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் மக்கள் என பலதரப்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். இந்தப் பேரணி, மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆரம்பித்து மன்னார் அரச செயலகத்தில் சென்று ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் ஒன்றை அரச அதிபரிடம் கையளித்ததுடன் முடிவடைந்தது.
முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 300 குடும்பத்தினர் கடந்த பல வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் பல இடங்களிலும் மிகுந்த இடற்பாடுகளுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர். தொழில்வாய்ப்புக்களோ அல்லது அடிப்படை வசதிகளோ அற்ற நிலையில் தற்காலிக உறைவிடங்களிலேயே இவர்கள் தங்கியிருக்கின்றார்கள்.
மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தங்களை இன்னும் தமது சொந்தக் கிராமத்திற்குச் செல்வதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை என இந்த மக்கள் கூறுகின்றார்கள்.
இந்தக் கிராமத்தில் கடற்படையினர் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். கிராமத்திற்குள் மக்கள் சென்று ஆலயத்தில் வழிபாடு செய்யலாம் வயல்களில் விவசாயம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றார்.
அத்துடன் இந்தக் கிராமம் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக்கப்பட்டள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என்றும், எனினும் அது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.இந்த விடயம் குறித்து அரச தரப்பின் கருத்துக்களை அறிவதற்கு அரச அதிகாரிகள் மற்றும் கடற்படையினரை தொடர்பு கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
மன்னார், முள்ளிக்குளம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யக் கோரி பேரணி
Reviewed by NEWMANNAR
on
September 14, 2011
Rating:

No comments:
Post a Comment