தமிழர்கள் ஏகமனதாக ஏற்கக் கூடிய அரசியல் தீர்வு உடனடியாகத் தேவை; இல்லையேல் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் என்கிறார் மன்னார் ஆயர்
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இன்றியமையாதது என்பதையே இன்றைய அரசியல் சூழ்நிலைகள் உணர்த்துகின்றன. எனவே, தமிழ் மக்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை விரைவில் வழங்குவதற்கு அரசு முன்வரவேண்டும். இல்லையேல், சர்வதேச அழுத்தங்கள் மென்மேலும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை நேற்று தெரிவித்தார்.
அரசியல் தீர்வை வழங்குவதற்கான அனைத்து அம்சங்களும், அதிகாரங்களும் தற்போதைய அரசிடம் உள்ளன. எனவே, ஒருமித்த மனதில் தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்க முன்வரவேண்டும் என்பதே ஆயர்மார்களின் திட்டவட்டமான கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கும் விடயத்தில் அரசுக்குள் இன்று முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இந்த முரண்பாடுகள் அரசியல் தீர்வு காணும் விடயத்தை திசைத் திருப்பிவிடுமோ என்ற அச்சம் இன்று தமிழ் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர்மையானதொரு நீதி கிடைக்கவேண்டும் என சர்வதேச சமூகம் கூறி வருகின்றது.
இந்நிலையில், இனப்பிரச்சினைக்கு எவ்வாறு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும், இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் ஆகியன தொடர்பாகக் கேட்டபோதே இராயப்பு ஜோசப் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
இலங்கைக்கு எதிராக இன்று சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன என்று பரவலாகப் பேசப்படுகின்றன. இது உண்மை தான். மனித உரிமை அமைப்புகள் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதைப்பற்றி நான் பெரிதாகப் பேச விரும்பவில்லை.
ஏனென்றால், இன்றைய சூழ்நிலையில் அரசியல் தீர்வு என்பது இன்றியமையாத தொரு விடயமாக உள்ளது. புண்பட்ட மனங்களைக் குணப்படுத்த அரசு விரும்புமானால், விரைவில் தீர்வுப் பொதியொன்றை முன்வைக்க வேண்டும்.
குறிப்பாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு தீர்வை ஒருமித்த மனதுடன் அரசு வழங்கவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். இதுதான் இன்றுள்ள முக்கியப் பிரச்சினையாகும்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகின்றோம். இப்பொழுது புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பல்லின சமூகத்தினரும் வாழும் நாடுதான் இலங்கை. இங்கு அனைவரும் சுமூகமாக வாழ் வதற்கு அரசு வழிசமைத்துக் கொடுக்கவேண் டும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின் றேன். அதுமட்டுமன்றி, ஏமாற்று வரலாற்றை எவ ராலும் வெற்றிபெற முடியாது என்பதை ஆட்சி யாளர்கள் புரிந்து செயற்பட்டால் நல்லது.
இதுவரை காலமும் அரசியல் தீர்வு விடயத்தில் பொய் வாக்குறுதிகளே வழங்கப்பட்டு வந்தன. அரசியல் தீர்வை வழங்குவதற்கான அனைத்து அம்சங்களும் நடைமுறையில் உள்ள அரசிடம் உள்ளன.
இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசு நிலையானதும், ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வை வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கும் பட்சத்திலேயே நாட்டில் நிலையான தொரு சமாதானம் ஏற்படும் என்றார் அவர்.
தமிழர்கள் ஏகமனதாக ஏற்கக் கூடிய அரசியல் தீர்வு உடனடியாகத் தேவை; இல்லையேல் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் என்கிறார் மன்னார் ஆயர்
Reviewed by NEWMANNAR
on
September 24, 2011
Rating:
No comments:
Post a Comment