ஐ.மு.கூட்டணி மற்றும் மத்திய அரசிலிருந்து திமுக உடனடியாக விலகுவதாக கருணாநிதி அறிவிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவு நீர்த்துப்போக விட்டதோடு, திமுக முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை.
எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது என்றார்.
ஈழத் தமிழர் போராட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.
ஈழத்தமிழர் உரிமை, தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக, 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக குரல் கொடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
2ம் இணைப்பு
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது என்று தி முக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் விலகல் கடிதத்தை இன்று உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈழப் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி காரணம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையை செய்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக அமைச்சர்கள் அனைவரும் இன்று அல்லது நாளை பதவி விலகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தி.மு.கவின் ஐந்து அமைச்சர்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர் பிரச்சினையில் டெசோ தொடர்ந்து ஈடுபடும் என்றும், தமது தலைமையிலான டெசோ குழு ராஜபக்சவை சந்தித்து பேசும் திட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மம்தா பெனார்ஜி தலைமையிலான திரிணாமூல் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகி இருந்தது. திரிணாமூல் கட்சியில் 4 அமைச்சர்கள் இருந்தனர்.
ஐ.மு.கூட்டணி மற்றும் மத்திய அரசிலிருந்து திமுக உடனடியாக விலகுவதாக கருணாநிதி அறிவிப்பு
Reviewed by Admin
on
March 19, 2013
Rating:

No comments:
Post a Comment