அண்மைய செய்திகள்

recent
-

இந்திய கழுதைகள் சரணாலய அதிகாரிகள் மன்னாருக்கு வருகை-மன்னார் கழுதைகளின் நலன் தொடர்பில் ஆராய்வு.

இந்திய கழுதைகள் சரணாலய அதிகாரிகள் மன்னாருக்கு வருகை தந்துள்ள நிலையில் மன்னாரில் உள்ள கழுதைகளின் நலன் தொடர்பாக  பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் தெரிவித்தார்.


மன்னார் ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நகர சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதன் போது இந்திய கழுதைகள் சரணாலயத்தின் சமூக பங்காளர்,கல்வி இணைப்பாளர் இராம் பர்வின்,இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவர் மற்றும் கால்நடை இணைப்பாளருமான வைத்தியர் ரமேஸ் குமார்,இந்திய கழுதைகள் சாரணாலயத்தின் கால்நடை வைத்தியர் சுமித்தா,டயஸ்போரா லங்கா அமைப்பின் இணைப்பாளர் ஜெரமி லியனகே, டயஸ்போரா லங்கா அமைப்பின் தொடர்பு அதிகாரி சின்கிலேயர் பீற்றர்,மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு மன்னார் நகர சபையின் உப தலைவர் விளக்கமளிக்கையில்,,,

மன்னாரில் கழுதைகள் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற நிலையில் யுத்தத்தின் காரணமாக மன்னார் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளான போது மனிதனுக்கும்,கழுதைகளுக்கும் இடையில் இருந்த நெருக்கமான பிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது  காட்டு கழுதைகளின் சிரமத்தை மன்னார் மக்கள் எதிர் நோக்குவதோடு இவைகள் மக்களினால் வெறுக்கப்பட்டும் வருகின்றது.

மன்னாருக்கு வெளி மாவட்டத்தில் இருந்து வருகின்ற மக்களையும்,சுற்றுலாப்பயணிகளாக மன்னாருக்கு வரும் மக்களையும் அதிகம் கவரக்கூடியாதாக இந்த கழுதைகள் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த கழுதைகளின் நலனை கவனத்தில் கொண்டு மன்னார் நகர சபை மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்திய கழுதைகள் சரணாலயத்தில் இருந்து 2 கால்நடை வைத்தியர்களும்,சமூக கல்வி அலுவலர் ஒருவரும் மன்னாருக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கு டயஸ் போரா லங்கா அமைப்பும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

இவர்கள் இங்குள்ள பொருத்தமான மிருக வைத்திய அலுவலகர்கள்,நகர சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றனர்.

மன்னார் நகர சபையின் கோரிக்கைக்கு அமைவாக காயப்பட்ட கழுதைகளுக்கு சிகிச்சையளித்தல்,பெரும் அவஸ்தைக்குட்பட்டு சிரமப்படுகின்ற கழுதைகளை கருணைக்கொலை செய்தல்,வெறிநாய்க்கடி தடுப்பு,எதிர்காலத்தில் கழுதைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நலம் அடித்தல்,கழுதையின் புள்ளிவிபரம் அடங்கிய மைக்ரோ சிப் ஒன்றை கழுதையில் காதில் பூட்டுதல்,கழுதையின் நல பராமரிப்பு தொடர்பாக பொருத்தமான மிருக வைத்திய சுகாதார அலுவலகர்களுக்கு பயிற்சி அளித்தல்,கழுதைகளை பழகப்படுத்துதல்,கழுதைகளுக்கான உணவு வழங்குதல்,சமூகத்திற்கு விழிப்புணர்வுக்கருத்தரங்குகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களும் தற்போது இடம் பெற்று வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த நடவடிக்கைக்கு மன்னார் நகர மக்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.











இந்திய கழுதைகள் சரணாலய அதிகாரிகள் மன்னாருக்கு வருகை-மன்னார் கழுதைகளின் நலன் தொடர்பில் ஆராய்வு. Reviewed by Admin on June 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.