யாழில் வைத்தியர்களுக்கு பெரும் பற்றாக்குறை
யாழ்.குடாநாட்டிலுள்ள பிரதேச வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இங்கு போதியளவு மருத்துவர்கள் இருப்பதாக அண்மையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சன் செயலாளர் ஆர்.ரவீந்திரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக மருத்துவ வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
தீவகத்திலுள்ள பல பிரதேச வைத்தியசாலைகள், வடமராட்சி கிழக்கிலுள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் தொல்புரம், அளவெட்டி போன்ற பல பிரதேச வைத்தியசாலைகளிலுமாக 15 இற்கு மேற்பட்ட வைத்தியசலைகளுக்கு வைத்தியர்கள் தேவையாக உள்ளனர்.
மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள பல விடுதிகளுக்கு வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையிலேயே வைத்தியர்கள் போதியளவாக உள்ள மாவட்டம் யாழ்.மாவட்டமே என்றும் இங்கு வைத்தியர்களுக்கு பற்றாக்குறை இல்லையென்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பாகவே மக்களும் மருத்துவர்களும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேற்படி அதிகாரி பொறுப்பற்ற விதத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இவர் இந்தக் கருத்தைக் கூறினார். நாங்கள் மருத்துவ வசதிகளின்றி தினமும் எத்தகைய கஸ்டங்களை அனுபவிக்கின்றோம் என்பதை மேற்படி அதிகாரி அறியவில்லையா என்று பல பிரதேச மக்களும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
குறித்த மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுவதைப் போன்று யாழ்.மாவட்டத்தில் போதிய மருத்துவர்கள் இருந்தால் உடனடியாக காரைநகர், தொல்புரம் போன்ற பிரதேச வைத்தியசாலைகளுக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க குறித்த அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மேற்படி பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழில் வைத்தியர்களுக்கு பெரும் பற்றாக்குறை
Reviewed by Admin
on
September 14, 2013
Rating:

No comments:
Post a Comment