ஆளுநராக சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி அனுப்பவுள்ளதாக கேள்வியுற்றுள்ளோம்! சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கில் பிரச்சினை இன்றி தேர்தல் நடக்கவில்லை. சில பிரச்சினைகள் நடைபெற்றன. அத்துடன், இந்த தேர்தலை நடத்தி விட்டோம் என்று மார்தட்ட வேண்டிய அவசியம் அரசிற்கு இல்லை. இதைக் காரணமாக வைத்து அப்படி கூறினால், அது வரவேற்கத்தக்கது.
வேறொரு அரசாங்கமும் வேறு கூட்டணியுமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் வளர்ச்சி திட்டத்திற்கான நிதி எவ்வாறு தரப்பட வேண்டுமென்பது சட்டத்தில் இருக்கின்றது. அதன் அடிப்படையில்தான் நிதி தரப்பட வேண்டுமே தவிர தான்தோன்றி தனமாக தரவேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு செய்ய அனுமதிக்க முடியாது. அரசாங்கங்கள் மாறலாம். ஆனால், நடைமுறை தொடர்ந்தும் அவ்வாறே இருக்கும்.
அரசுடன் இணைந்து 13வது திருத்தத்தினை நல்ல முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம். அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆகவே எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு அரசாங்கத்திடம் தான் கேட்க வேண்டும்.
அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மாட்டோம், எதேச்சதிகாரமாக நடப்போம், அதேபோன்று நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னால், பிரச்சினைகள் ஏற்படும் என்றும் எங்களை பொறுத்தவரையில் அரசாங்கத்துடன் சேர்ந்து ஜனநாயக முறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்களை நல்ல முறையில் செயற்படுத்திச் செல்ல நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதுடன், இந்த விடயங்களை அரசாங்கத்திடம் கேட்பதே சிறந்தது.
அதேவேளை, இராணுவத்தில் இருந்த ஒருவர் ஆளுநராக இருக்கும் பட்சத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மக்களின் பிரச்சினைகளை முறையாக சரியாக உணர்ந்து செயற்படுத்துகின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.
அதன்பிரகாரம், சிவில் சமூகத்தில் இருந்து போதிய அதிகாரம் உள்ள மக்களின் பிரச்சினைகளை புரிந்து தெரிந்து கொண்ட ஒருவர் ஆளுநராக இருந்தால் தான் நல்லது. அத்துடன், அவ்வாறு தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.
ஜனாதிபதியினால் சிவில் சமூகத்தில் இருந்து ஒருவரை அனுப்புவதாக கேள்வியுற்றுள்ளோம். அவருடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசுவதாக கூறியுள்ளோமே தவிர, இணைவதாக கூறவில்லை. இணைந்து செயலாற்றுவதற்கும், பேச்சுவார்த்தையில் பேசுவதற்கும், வித்தியாசங்கள் இருக்கின்றன. இவ்வாறு சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட அடிப்படையில் ஆட்சி அமைக்கும் அதிகாரம் நீதி, நிர்வாகம், நிதி சம்பந்தமான அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் இறைமை பகிர்ந்தளிக்க வேண்டும்.
வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னேப்பதும் அடையாத வெற்றியீட்டியுள்ளது.
மக்களின் ஜனநாயக தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது. ஐக்கிய பிளவு படாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும் சுய மரியாதையோடும் கௌரவமாகவும் போதிய சுயாட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல் பொருளாதார சமூக கலாசார அபிலாசைகளை அடைய விரும்புகின்றனர்.
இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயற்படும் அதேவேளை அரசாங்கம் தனது பங்களிப்பை முழுமையாக செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.
இந்த பெறுபேறு அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றது.
தமிழ் மக்கள் தெளிவாகவும், துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என நாம் வற்புறுத்தி கேட்கின்றோம்.
தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என அவர் மேலும் அவர் தெரிவித்தார்.
ஆளுநராக சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி அனுப்பவுள்ளதாக கேள்வியுற்றுள்ளோம்! சீ.வி.விக்னேஸ்வரன்
Reviewed by Admin
on
September 23, 2013
Rating:

No comments:
Post a Comment