இலங்கை தமிழர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற இடைக்கால தடை
மேலும் புதிதாக முறையீடு அளிக்க இலங்கை தமிழருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, பம்மல் நகரைச் சேர்ந்த செந்தூரான் என்பவர் தாக்கல் செய்த மனு வருமாறு,
இலங்கையில் நடந்த இனப்பிரச்னையால், 2011ல் அகதியாக இந்தியா வந்தேன். தேவகோட்டை தாசில்தார் அனுமதி பெற்று சென்னையில் உள்ள மனைவி மற்றும் குழந்தையை சந்தித்தேன்.
சென்னையில் வேலை கிடைத்ததால் தாசில்தாரின் அனுமதி பெற்றேன். மாதம் ஒரு முறை அவரிடம் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் போன் மூலம் தாசில்தாரிடம் தகவல் தெரிவிப்பேன். "க்யூ´ பிரிவு பொலிசாரும் விசாரணை நடத்துவர். இந்நிலையில் என்னையும் வேறு இருவரையும் இலங்கைக்கு நாடு கடத்த அரசு உத்தரவிட்டிருப்பதாக செய்தி வெளியானது. என்னை, நாடு கடத்தக் கூடாது. அந்த உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை, நீதிபதிகள் ராஜேஸ்வரன், ஆறுமுகசாமி அடங்கிய குழு விசாரித்தது. செந்தூரான் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோவன் ஆஜராகினர்.
நீதிபதிகள் குழு பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில் சட்டத்துறை உயரதிகாரி, "தன் குறைகளை குறிப்பிட்டு புதிய மனுவை வெளியுறவுத் துறை விவகாரங்களைக் கவனிக்கும் அரசு செயலரிடம் மனுதாரர் அளித்தால் அதை அவர் சட்டப்படி பரிசீலிப்பார்´ என தெரிவித்தார். அதற்கு மனுதாரர் வழக்கறிஞரும் ஒப்புக்கொண்டார்.
எனவே, 15, நாட்களுக்குள், விரிவான மனுவை, வெளியுறவுத்துறை விவகாரங்களை கவனிக்கும் அரசு செயலரிடம் மனுதாரர் வழங்க வேண்டும். அதன்பின், அந்த மனுவை எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை மனுதாரரை நாடு கடத்தும் உத்தரவை நிறுத்தி வைக்கவேண்டும்.
அரசு செயலர் பிறப்பிக்கும் உத்தரவு, மனுதாரருக்கு எதிராக இருந்தால் அதை உடனடியாக அமல்படுத்தாமல் சட்டப்படி நிவாரணம் கோருவதற்கு அவருக்கு அவகாசம் அளிக்கவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் குழு உத்தரவிட்டு உள்ளது.
இலங்கை தமிழர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற இடைக்கால தடை
Reviewed by Admin
on
September 12, 2013
Rating:

No comments:
Post a Comment