நான் வெற்றி பெற்றால் எனது வெற்றியை உரிமை போரில் உயிர் நீர்த்த அனைவருக்கும் சமர்ப்பணம் செய்வேன்-வினுபானந்த குமாரி.
மாகாணசபை தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், எனது வெற்றியை உரிமை போரில் உயிர்நீத்த அனைவருக்கும் சமர்ப்பணம் செய்வேன் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பெண் வேட்பாளர் வினுபானந்தகுமாரி தெரிவித்தார்.
முழங்காவில் பிரதேசத்தில் கண்டு வீதி குடியிருப்பு, கரியாலை நாகபடுவான், நாவாந்துறை, இரணைதீவு ஆகிய பகுதிகளில் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட ஒரேயொரு பெண் வேட்பாளர் வினுபானந்தகுமாரியை ஆதரித்து நேற்று புதன் கிழமை தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
இதன் போது நாவாந்துறையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பெண் வேட்பாளர் வினுபானந்தகுமாரி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கிளிநொச்சி மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களில் நான் ஒருத்தி மட்டுமே ஒரேயொரு பெண் வேட்பாளராக போட்டியிடுகின்றேன். இந்த மாவட்டத்துக்கே உரித்தான அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை ஒட்டுமொத்த பெண்களுக்கும் கிடைத்த அரசியல் அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன்.
எனவே இந்த நல்வாய்ப்பை துஸ்பிரயோகம் செய்யாமல் இந்த மாவட்டத்தின் அனைத்து பெண்களுக்கும் பலனளிக்கும் வெற்றிக்கனியாக மாற்றியமைக்க என்னால் முடிந்தவரையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிக்கொண்டிருக்கின்றேன்.
இதன் பலாபலன்களை கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பெண்களும் அநுபவிக்க வேண்டுமாகவிருந்தால், மாவட்டத்தின் அனைத்து மாதர் கிராமிய அபிவிருத்திச்சங்கங்களும், பெண்கள் நலன் விரும்பும் அமைப்புகளும், பெண் உரிமை மற்றும் பெண் விடுதலைக்காக குரல் கொடுப்போரும் என்னுடன் இணைந்து எனது வெற்றிக்காக முழுமூச்சுடன் பணியாற்ற வருமாறு அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றேன்.
எனது வெற்றியே கிளிநொச்சி மாவட்ட பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கான முதல்படியாக அமையுமென அரசியல் தலைவர்களும், எனது தோல்வி ஒட்டுமொத்த கிளிநொச்சி மாவட்ட பெண்களின் தோல்வியாக கருதப்படுமென அரசியல் விமர்சகர்களும் கூறுகின்றனர்.
எனவே மாகாணசபை தேர்தலில் நான் வெற்றி பெறும் பட்சத்தில் எனது வெற்றியை எமது இனத்துக்கான, விடுதலைக்கான உரிமைப்போரில் உயிர்நீத்த அனைவருக்கும் சமர்ப்பணம் செய்வேன் என உங்களிடத்தில் உறுதி கூறுகின்றேன் எனத்தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நானாட்டான் பிரதேசசபை உபதலைவர் றீகன், மன்னார் நகரசபை உறுப்பினர் குமரேஸ், கேப்பாப்பிளவு மாதர் அபிவிருத்திச்சங்க தலைவி சந்திரலீலா ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
நான் வெற்றி பெற்றால் எனது வெற்றியை உரிமை போரில் உயிர் நீர்த்த அனைவருக்கும் சமர்ப்பணம் செய்வேன்-வினுபானந்த குமாரி.
Reviewed by Admin
on
September 12, 2013
Rating:
No comments:
Post a Comment