இரணைமடு திட்டம் மாகாண சபையினால் பொறுப்பேற்பு
இரணைமடு குடிநீர் வழங்கல் திட்டம் வட மாகாண சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கப்படவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியிலேயே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் தொடர்பிலான கருத்தரங்கொன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம வளவாளராகக் கலந்துகொண்டார். இந்த கருத்தரங்கின் போது இத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இதனால் தாங்கள் பாரியளவு பாதகமான விளைவுகளையே சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர்,
"இந்தத் திட்டத்தினை வட மாகாண சபை கையேற்கின்றதுடன் இத்திட்டத்திலுள்ள பாதக சாதக நிலைமைகள் பற்றி ஆராய்ந்த பின்னர் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான தீர்மானம் வெளியிடப்படும்.
இதற்காக சகல தரப்பினரையும் கருத்திற்கொண்டு ஒரு சுமுகமான அணுகுமுறைகளினூடாக இத்திட்டம் பரிசிலீக்கப்படும்.
இது தொடர்பாக வட மாகாண சபை சரியான முடிவுகளை எடுக்கும்.
ஏனென்றால், எமது பிரதேசங்களுக்கு நன்மை கிடைக்கக் கூடிய திட்டங்களையே நாம் கட்டாயம் அமுல்படுத்த வேண்டும்" என்றார்.
இரணைமடு திட்டம் மாகாண சபையினால் பொறுப்பேற்பு
Reviewed by Admin
on
October 21, 2013
Rating:
No comments:
Post a Comment