அண்மைய செய்திகள்

recent
-

முழுமையாக மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்பது பொய்: சிறிதரன் எம்.பி.

வடமாகாணத்தில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்படாமல் இன்றும் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் சூழ்நிலையில் தமிழ் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று வடமாகாண ஆளுநர் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய்யானதாகும் என்பதுடன், அவரது கூற்று கண்டனத்திற்குரியதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

 யாழ். வலி. வடக்கு பொதுமக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (12) அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'வடமாகாண சபையின் இரண்டாம் அமர்வில் தனது கன்னி உரையை நிகழ்த்திய வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாணத்தில் முழுமையான மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 

 அந்த அமர்வில் விசேட உரையாற்றுவதற்கு அவருக்கு உரிமையிருக்கலாம். ஆனால், ஒரு இனத்தின் சொந்த நிலங்களை ஆக்கிரமித்து அங்கு வாழ்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் வாழவிடாமல் தடுத்திருக்கும் சூழ்நிலையில் இவ்வாறு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான உரைகள் மூலம் ஒரு இனத்தை சீண்டி அதனை அழிக்க நினைப்பதற்கு இது ஒரு சான்றாகும். வலி. வடக்கிலுள்ள 27 கிராமங்களைச்; சேர்ந்த மக்களில் 16 கிராமங்களுக்கு மேற்பட்டவர்கள் அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். 

இதில் 7 கிராம அலுவலர் பிரிவுகளில் பகுதியளவிலும் 14 கிராம அலுவலர் பிரிவுகளில் முழுமையாகவும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. மேலும் மண்டைதீவு, செம்மண்தீவு பகுதிகளில் கடலோடு இணைந்த பாதுகாப்பு வலயம் எனக்கூறி வடமராட்சி கிழக்கு பகுதியிலும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு பிரதேசமும் கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான், மருதநகர் ஆகிய பிரதேசங்களும் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 

 நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் யுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் கொலைக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்' என்றார்.
முழுமையாக மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்பது பொய்: சிறிதரன் எம்.பி. Reviewed by NEWMANNAR on November 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.