அண்மைய செய்திகள்

recent
-

முரளிதரன் பொதுமன்னிப்பு கோர வேண்டும்: மனோ MP

பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை  கொச்சைப்படுத்தி, முத்தையா முரளிதரன் மாற்று வரலாற்றில் இடம்பிடித்து விட்டார். பொறுப்பற்ற விளையாட்டுத்தனமான தனது இந்த கருத்து தொடர்பில் பந்துவீசி விளையாடும் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் பொதுமன்னிப்பு கோரி விளக்கம் அளிக்க வேண்டும்'

'முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். இந்த ஆட்சியில் இந்த நாடு  இன்று ஆசியாவின் ஆச்சரியமாக மாறி, உலக ஆச்சரியமாகும் பாதையில் நடை போடுகிறது என்றும் சொல்லலாம். இவை பற்றி நாம் கிஞ்சித்தும் கவலைப்பட போவதில்லை. தங்களது  இருப்புகளை தக்க வைத்துகொள்வதற்காக,  இது போன்று  கருத்து கூறும் நீல இரத்தம் ஓடும் தமிழர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். ஆனால், இருபது – முப்பது தாய்மார்கள்  தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் மனித உரிமை குற்றச்சாட்டுகள் உண்மையாகவிடாது என பெற்ற பிள்ளைகளை இழந்த தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

'1995ஆம், 1996ஆம் வருடங்களில் அவுஸ்திரேலிய நடுவர்கள் டெரலும், எமர்சனும், முரளிதரனின் பந்துவீச்சை குற்றம் சாட்டியபோது அது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கட் உலகம் கோரியது. 

அதையடுத்து சர்வதேச கிரிககெட் சபை ஒரு விற்பன்னர்களின் குழுவை நியமித்து முரளிதரனின் உடம்பில் ஆய்வு உபகரணங்களை பொருத்தி, கையை அளந்து பார்த்து மருத்துவ பரிசீலனை செய்து, பந்துவிச்சை படம் பிடித்து ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியதை முரளிதரனுக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன். அவர் மீது சுமத்தப்பட்ட இந்த பாரிய குற்றச்சாட்டு தொடர்பில் கிரிக்கெட் பற்றி எந்தவித அறிவும் இல்லாத அரசியல்வாதிகள் கருத்துகூறுவதும், அதைவிட இதுபற்றி விசாரிக்காமலேயே  தீர்ப்பு கூறுவதும்  எந்த அளவுக்கு பொறுத்த மற்றதாக இருந்ததோ, அதைவிட இன்று முரளிதரன், இந்நாட்டில் காணமல்போனவர்களின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் கருத்து கூறுவது 
முட்டாள்தனமானது.  

இவருக்கு இவரது அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட ஆணைகுழு பற்றியும் தெரியவில்லை,  ஐ.நா மனித  உரிமை ஆணைக்குழு பற்றியும் தெரியவில்லை. 

இந்த கிரிக்கட் வீரரின் இந்த கூற்று, மனித உரிமைகளுக்காக இந்நாட்டில் போராடும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மனித உரிமை போராளிகளையும்,  தமிழகத்திலும், உலகம் முழுக்கவும் மனித உரிமை போராட்டங்களை நடத்தி வரும் உணர்வாளர்களையும் மிக கடுமையாக அவமானப்படுத்தியுள்ளது. 

கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கப்பம் வாங்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மனித உரிமை போராளிகளை, தனது பொறுப்பற்ற கருத்தின் மூலம் முட்டாள்களாக முரளிதரன் அடையாளப்படுத்தியுள்ளார். 

பொறுப்பற்ற விளையாட்டுத்தனமான தனது இந்த கருத்து தொடர்பில் பந்துவீசி விளையாடும் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் பொதுமன்னிப்பு கோரி விளக்கம் அளிக்க வேண்டும். 

இருபது – முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடாது என முரளிதரன் கூறுகிறார். அதாவது விசாரிக்காமலேயே இவர் தீர்ப்பு வழங்குகிறார். இதுபற்றி, உண்மை அல்லது பொய் என தீர்ப்பு வழங்க முரளிதனுக்கு என்ன தகைமை என நான் கேட்க விரும்புகிறேன்.

முரளிதரன் புகழும் இதே இலங்கை அரசாங்கம் நியமித்த 'கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு' காணாமல் போனோரது உறவுகளின் கதறல்களை மறுக்க முடியாமல் இவை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. 

இதை செய்யும்படிதான் முரளிதரன் கொச்சைபடுத்தியுள்ள கதறியழும் அந்த தாய்மார்களும் கோருகிறார்கள். இதையே டேவிட் கமரூனும் கோருகிறார். இதையே தமிழகமும் கோருகிறது. சர்வதேச மன்னிப்பு சபை உட்பட உலக மனித உரிமை அமைப்புகளும் இதையே கோருகின்றன. எல்லாவற்றிலும் மேலாக ஐ.நா சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல்வேறு நாடுகள் ஒன்றிணைத்து நிறைவேற்றிய அதிகாரப்பூர்வமான தீர்மானமும் இதையே கோருகிறது. இது எதுவும் இலங்கையிலும், இந்தியாவிலும் பந்துவீசி விளையாடும் முத்தையா முரளிதரனுக்கு தெரியவில்லை.

'வடக்கிற்கு அழைத்து  சென்று பிரதமர் டேவிட் கமரூனை சிலர் தவறாக வழி நடத்தி விட்டதாக' சொல்லியும்,  நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கிலேயே இன்று அதிக வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதகவும் கூறியும், இதை வட இலங்கையின் பிரச்சினையாக மாத்திரம் காட்டுவதற்கும் முரளிதரன் முயற்சி செய்துள்ளார். பிள்ளைகளை காணவில்லையென  தாய்மார்களும், பெரியவர்களை காணவில்லையென பிள்ளைகளும், கணவர்மார்களை காணவில்லையென  மனைவிமாரும்; தேடியலைந்து போராடுவது வடக்குக்கு மாத்திரம் சொந்தமான பிரச்சினையல்ல. இது இன்று ஒரு தேசிய பிரச்சினை. 

தெற்கில் இது தொடர்பில் போராடுவது தடுக்கப்பட்டுள்ளது. வடக்கிலே இன்று மட்டுப்படுத்தப்பட்ட தமிழர் ஆட்சி நிலவுவதால் அங்கு இதை அடையாளப்படுத்தப்படுத்த களம் ஏற்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டு கலவரத்தின் போது தமிழர் என்ற ரீதியில் கண்டியிலே தமது வீடு எரிக்கப்பட்டதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.  இப்படியான கலவரங்களின் பின்னர், தெற்கில் வாழ்ந்த  வசதி படைத்த தமிழர்கள் தமிழகத்துக்கு சென்று அடைக்கலம் புகுந்தனர் அல்லது மேற்கு நாடுகளுக்கு  சென்று குடியேறினர்.  வசதியற்ற ஏழை மலையக தமிழர்கள் வடக்கில் சென்று குடியேறினார்கள். 

இன்று வடக்கிலே தங்கள் பிள்ளைகளை இழந்து, 'அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா, இருந்தால் அவர்கள் எங்கே  இருக்கிறார்கள்' என கதறியழும் அந்த தாய்மார்களில் சரிபாதியினர் தெற்கில் இருந்து சென்று வடக்கில் குடியேறிய  மலையக தமிழர்கள் என்பதை முரளிதரன் அறிந்து கொள்ளவேண்டும். இவர்களைத்தான் முரளிதரன் கொச்சைபடுத்தியுள்ளார். வீடுகள் எரிக்கப்படுவது என்பது வேறு, பெற்ற பிள்ளைகள் கடத்தப்படுவது என்பது வேறு. இது முரளிதரனுக்கு புரியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டிலும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சர்ச்சைக்குரியவராக இருந்த இந்த கிரிகn;கட் வீரருக்கு, மனித உரிமைகள் பற்றிய எந்தவித தெளிவும், விளக்கமும் இல்லை. இந்நிலையில்  எவரையோ திருப்திபடுத்த தனக்கு விளங்காத விடயங்கள் தொடர்பில் இவர் முட்டாள்தனமாக கருத்து கூறியிருக்கிறார்.

முரளிதரன் பொதுமன்னிப்பு கோர வேண்டும்: மனோ MP Reviewed by Author on November 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.