வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
மீசைமாதையன், சைமன், பிலவேந்திரன், ஞானபிரகாஷம் ஆகிய 4 பேருடன் மற்ற வழக்குகளில் தொடர்புடைய 11 பேரின் தூக்கும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மேலும், மரண தண்டனை கைதிகளை தனி அறையில் அடைக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
கடந்த 1993-ஆம் ஆண்டு கர்நாடகாவில் வீரப்பனின் கூட்டாளிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அம்மாநில காவல் துறையினர் 22 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் வீரப்பனின் மூத்த சகோதரர் ஞானப்பிரகாசம், கூட்டாளிகள் பிலவேந்திரண், சைமன், மீசை மாதையன் ஆகிய நான்கு பேருக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதற்கு எதிராக அவர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக அதிகரித்து உச்ச நீதிமன்றம், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
மரண தண்டனையை குறைக்க கோரி அந்த நான்கு பேரும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அந்த மனுக்களை ஒன்பது ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
இதனையடுத்து, கருணை மனுக்களை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால், தூக்கு தண்டனையை குறைக்க கோரும் உரிமை உள்ளது எனக் கூறி, அவர்கள் சார்பில் வழக்கறிஞர் காலின் கான்சல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மனுத் தாக்கல் செய்தார்.
அதன் மீதான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரண தண்டனை ரத்து ஆனதால், தீர்ப்பை எதிர்நோக்கி இருந்த ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், மீசை மாதையன் ஆகியோர் பெல்காம் மாவட்ட சிறையிலும், சைமன் பெங்களூரு சிறையிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு
Reviewed by NEWMANNAR
on
January 21, 2014
Rating:

No comments:
Post a Comment