அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு விவசாயிகளை வெங்காயம் கண்ணீர்விட வைக்காது: பொ.ஐங்கரநேசன்

வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வரலாம். ஆனால், வடக்கின் விவசாயிகளை வெங்காயம் ஒருபோதும் கண்ணீர்விட வைக்காது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை கைதடியில் விதை வெங்காயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் வயல் விழா நடைபெற்றது. யாழ்- மாவட்ட பிரிதி விவசாயப் பணிப்பாளர் கி.சிறீபாதசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில்,

வெங்காயச் செய்கையில் ஈடுபட்டவர்கள் கடந்த காலத்தில் பொருளாதார ரீதியாக மிக உயர்வான நிலையில் இருந்துள்ளார்கள். வெங்காய வருவாயில் வீடு கட்டிய விவசாயிகளையும் வாகனங்கள் வாங்கிய விவசாயிகளையும் எனக்குத் தெரியும். அந்த அளவுக்கு இலாபம் ஈட்டக்கூடிய ஒரு பயிராக வெங்காயம் இருந்துள்ளது.

ஆனால், போர் எல்லாவற்றையும் தலை கீழாகப் புரட்டிப்போட்டு விட்டது. இப்போதுதான் எமது விவசாயிகள் மீண்டும் நிமிர்ந்தெழ ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டில் வடக்கில் 78,000 மெற்றிக் தொன்கள் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இதில் மிகப் பெரும்பங்கு யாழ்ப்பாணத்திலேயே விளைவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் மொத்த வெங்காய உற்பத்தியில் எமது விவசாயிகளின் உற்பத்தி அரைவாசிக்கும் அதிகமாகும். யாழ்ப்பாணத்தில் விளைகின்ற வெங்காயத்தின் தரம் தென்னிலங்கை வெங்காயத்தை விட உயர்வானது.

எமது வெங்காயத்துக்கான சந்தை வாய்ப்பு எப்போதும் தென்னிலங்கையில் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் வெங்காய உற்பத்தியை வடக்கில் அதிகரித்தால் அதிக வருவாயை நாங்கள் பெறலாம்.

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் புகையிலையை நம்பியிருந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், உலகளாவிய ரீதியில் புகைப்பிடித்தலுக்கு எதிரான போக்கு உருவாகி வருவதால் புகையிலைச் செய்கை குறைவடைய ஆரம்பித்திருக்கிறது. அத்தோடு, புகையிலையில், பெரிய இலைகள் தோன்றுவதற்காக அதிக அளவு நைதரசன் பசளைகளை இடவேண்டியுள்ளது.

எமது நிலத்தடி நீர் மாசுபட்டதற்கு இந்த புகையிலைச் செய்கைதான் பெருங்காரணமாக இருந்திருக்கிறது. இதனால், புகையிலைக்கு மாற்றாக விவசாயப் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய ஓரு பயிராக இன்று வெங்காயமே உள்ளது.

தரமான வெங்காய விதைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்தியாவிலிருந்தே அதிகம் எடுத்து வரவேண்டியுள்ளது. இதனாலாலேயே வடமாகாண விவசாயத் திணைக்களம் விதைகளை நாமே உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விதை வெங்காய உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றது.

அது இப்போது கைதடியில் சாத்தியமாகியும் இருக்கிறது. எமது வெங்காய உற்பத்தியாளர்கள் மீண்டும் பொருளாதார ரீதியாக உயர்வடையும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு நாம் எப்போதும் பக்கபலமாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் ஆகியோருடன் விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.




வடக்கு விவசாயிகளை வெங்காயம் கண்ணீர்விட வைக்காது: பொ.ஐங்கரநேசன் Reviewed by NEWMANNAR on February 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.