இலங்கை கடற்படையினரால் புதுகை, மண்டபம் மீனவர்கள் 19 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேர் ,மண்டபம் மீனவர்கள் 8 பேர் என 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 230 விசைப்படகுகளில் சனிக்கிழமை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் 3 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேட்சன் (30), சம்சு (45), பழனியப்பன் (40), ராமர் (30), அந்தோணி (27), நாகமுத்து (50), ராஜசேகர் (35), இருளாண்டி (50), குமாரவேல் (22), கிருஷ்ணசாமி (50), ஏழுமலை (50) ஆகிய 11 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தொடரும் அத்துமீறல்கள் மீனவர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மண்டபம் மீனவர்கள் கைது: மண்டபம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை 300க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள், பாக் ஜலசந்தி, தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், தங்கச்சிமடம், விக்டோரியா நகரைச் சேர்ந்த சிந்தாத்துரை, உச்சிப்புளி பகுதியை சேர்ந்த முனீஸ்வரி ஆகியோரின் படகுகளில் சென்ற முருகானந்தம்(45), துரைசாமி(50), குணசேகரன்(55), மாகபாண்டி(35), நடராஜன்(50) மாரியப்பன்(35), சகாதேவன்(60) உள்பட 8 மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்றனர்.
இவர்களை விசாரணை செய்து, காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.பின்னர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து ஊர்க் காவல்துறை நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதிபதி பிப்.14ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை 680க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் தலைமன்னார், கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் வந்த இலங்கை கடற்படையினர் 20க்கும் மேற்பட்ட படகுகள் மீது கற்களை வீசி, வலைகளை வெட்டிவிட்டு விரட்டியுள்ளனர்.
இதையடுத்து, மீனவர்கள் படகுகளை எடுத்துக்கொண்டு நடுக்கடலில் வந்து பல மணி நேரம் காத்திருந்துள்ளனர். இலங்கை கடற்படையினர் அப்பகுதியிலிருந்து சென்றவுடன் வெட்டிவிட்ட வலைகளை எடுத்துக்கொண்டு கரையோரப் பகுதியில் மீன்களை பிடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்குத் திரும்பினர். கரையோரங்களில் மீன்பிடித்ததால் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை எனவும், இதனால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினரால் புதுகை, மண்டபம் மீனவர்கள் 19 பேர் கைது
Reviewed by NEWMANNAR
on
February 03, 2014
Rating:

No comments:
Post a Comment