வேலைவாய்ப்பு, பாதுகாப்பு இல்லாமையாலேயே இளைஞர்கள் புலம்பெயர்கின்றனர்: ஆஸி. பிரதிநிதியிடம் அமைச்சர்கள் தெரிவிப்பு
மது மக்கள் இந்த மண்ணை விட்டுப் புலம் பெயர்வதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் எமது இளைஞர்களால் வேலைவாய்ப்பைப் பெறமுடியவில்லை. எமது இளைஞர்கள், குறிப்பாகத் தடுப்பு முகாம்களில் இருந்து விடுதலையான போரளிகள் இங்கு தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்றே உணருகிறார்கள். இதனால்தான் கடலில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவும் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் சுட்டிகாட்டியுள்ளார்கள்.
அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகாரத் திணைக்கள நிறைவேற்று அதிகாரி ஜொன் பொனர், அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவுத் துணைச் செயலர் எட்வினா சின்கிளெயர் மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர் நஸ்;ரீன் மரிக்கார் ஆகியோர் முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும், கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவையும் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன், போர் முடிந்து ஐந்து ஆண்டுகளைத் தொடவுள்ள நிலையிலும் இன்று வடக்கில் இராணுவ மேலாதிக்கமே நிலவுகிறது. அரசாங்கம் காவலரண்களையும் சிறு முகாம்களையும் மூடிவிட்டுப் படைக்குறைப்புச் செய்ததாகக் சொல்லுகிறது. அங்குள்ள இராணுவத்தினர் வடக்கில் உள்ள ஏனைய பெரிய முகாம்களுக்குள் நகர்த்தப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.
இன்று சிவில் நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் இராணுவம் தலையிடுகின்றது. தொழில் முயற்;சியில் இராணுவம் ஈடுபடுகின்றது. இதனால் எமது இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பறிக்கப்படுகின்றது. வடக்கில் 60 விழுக்காடுக்கும்; அதிகமான மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு காலத்தில் விவசாயத்தில்தான் ஈடுபட்டிருந்தார்கள்.
இன்று போர் எல்லாவற்றையும் சீர்குலைத்துவிட்டது. வடக்கின் மிகவளமான வலிவடக்கின் 6400 ஏக்கர் காணியை பொதுமக்களிடம் இருந்து இராணுவம் அபகரித்து வைத்திருக்கிறது. எமது விவசாயப் பண்ணைகளிலும் பலவற்றை இராணுவமே ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. இவற்றை எங்களிடம் தந்தாலே விவசாயத்தில் எமது மக்கள் ஈடுபட்டு வேலைவாய்ப்பைத் தேடிக்கொள்வார்கள்.
இராணுவம் காவலில் வைத்திருந்த எமது இளைஞர்களையும், யுவதிகளையும் கணிசமான அளவில் விடுதலை செய்திருப்பது என்னவோ உண்மைதான். அவர்களுக்குப் புனர்வாழ்வில் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறி வந்தாலும் அந்தப் பயிற்சிகளைக் கொண்டு அவர்களால் வருவாய் தரும் எந்தத் தொழிலையும் தேடிக்கொள்ள முடியாது என்பதுதான் யதார்த்;தம்.
சமூகமும் விடுதலையான போரளிகளைப் பயத்தின் காரணமாக அரவணைக்கத் தயங்குகின்றது. அத்தோடு, விடுதலையான போராளிகளை மீளவும் கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவைபோன்ற காரணங்களால்தான் இந்த மண்ணில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையில்லாமல் எமது மக்கள் கடலில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவுஸ்திரேலியாவுக்குப் படகேறிக் கொண்டிருக்கிறார்கள். இதை அவுஸ்திரேலிய அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும். இயலுமாயின், அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் மூலம் வடக்கில் இருக்கும் இராணுவத்தை மீளப்பெறுமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தச் சொல்லுங்கள் என்று அவுஸ்திரேலிய பிரதிநிதிகளிடம் எடுத்துத் கூறியிருந்தோம் எனத் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு, பாதுகாப்பு இல்லாமையாலேயே இளைஞர்கள் புலம்பெயர்கின்றனர்: ஆஸி. பிரதிநிதியிடம் அமைச்சர்கள் தெரிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
March 15, 2014
Rating:

No comments:
Post a Comment