எனது கைப்பேசியை எவரோ பயன்படுத்தியுள்ளார்: அமைச்சர் ரிஷாட்
மன்னார் சம்பவத்திற்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று மாலை 4 மணியளவிலேயே குறித்த இடத்திற்கு நான் சென்றேன் என்று தெரிவித்த கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தனது கையடக்க தொலைபேசியை யாரோ பயன்படுத்திவிட்டனர் என்றும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை நான் அவமதித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எனக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு மேலதிக விசாரணைகள் எதுவுமின்றி நேற்று வெள்ளிக்கிழமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும்; அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,
2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17,18 ஆம் திகதிகளில் நீதவானை நான் அச்சுறுத்தியதாக என்மீது வழக்கு சுமத்தப்பட்டிருந்த வழக்கே நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
என் பெயரில் பதிவு செய்யப்பட்ட கைத்தொலைபேசியிலிருந்து மன்னார் நீதிமன்ற நீதவான் ஜுட்சனுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டதாக ஏழு சட்டத்தரணிகள் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்திருந்திருந்தனர். எனது பெயரில் பதியப்பட்ட அந்த தொலைபேசியில் என்னுடைய அனுமதியின்றி அதிகாரம் அளிக்கப்படாத வகையில் இந்த அழைப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று ஜனாதிபதி மாளிகையிலேயே நான் இருந்தேன். மன்னார் நீதிமன்ற வளாகத்தில் காலைவேளையிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் விசேட ஹெலிகெப்டரில் நான் மாலை 4 மணிக்கே சம்பவ இடத்திற்கு சென்றேன்.
எனது அறிவுக்கு எட்டிய வரை நான் குறிப்பிட்ட நீதவானை எந்த சந்தர்ப்பத்திலும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாத போதும் எனது தொலைபேசியிலிருந்து இந்த அழைப்புக்கள் சென்றதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உள்ளாக்கப்பட்டேன்.
இவ் வழக்கு தொடர்பில் நான் எந்த வகையிலும் பொறுப்பாளியாக இல்லாத போதும் எனது தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியிருந்ததனால் நான் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தேன்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆரம்பமான நாள் முதலே நான் இதற்கு பொறுப்பாளி அல்ல என்றும், நீதித்துறையை என்றுமே மதிப்பவன் என்றும் அந்தத் துறையின் கௌரவமான பணிகளுக்கு எந்தக் காலத்திலும் நான் இடைஞ்சலாக இருந்தவன் அல்லன் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பேணுபவன் என்ற வகையில் நீதித்துறைக்கு ஏதேனும் அகௌரவம் ஏற்பட்டிருப்பின் அதற்காகவும் மனவருந்துகின்றேன் என மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் அப்படியாயின் உங்களுடைய தொலைபேசியை பயன்படுத்தியவர் யார், அந்த தொலைபேசியை இன்னும் நீங்கள் பயன்படுத்துகின்றீர்களா? என்று கேள்வியெழுப்பினர். இதன்போது இடைமறித்த ஜனாதிபதி சட்;டத்தரணி எம்.என் சுஹைர், இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையினால் அதனைபற்றி பேசதேவையில்லை என்றார்.
எனது கைப்பேசியை எவரோ பயன்படுத்தியுள்ளார்: அமைச்சர் ரிஷாட்
Reviewed by NEWMANNAR
on
March 15, 2014
Rating:

No comments:
Post a Comment