அண்மைய செய்திகள்

recent
-

வேலையில்லா பட்டதாரி விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி தனது அதிரடி சாகசங்கள் மூலம் வி.ஐ.பியாக மாறும் வழக்கமான கதை. அதை புதிய களத்தில் புதிய விதத்தில் சொல்லி இருக்கிறார்கள். சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு, வேலையில்லா பட்டதாரியாக அலைபவர் தனுஷ். தம்பி வேலைக்கு சென்று சம்பாதிப்பதால் அப்பா சமுத்திரக்கனி தண்டச்சோறு அபிஷேகம் நடத்துகிறார். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் கிடந்து பாசத் தவிப்பில் துடிக்கிறார் அம்மா சரண்யா. தனுஷின் பொறுப்பற்றத் தன்மையால் அம்மாவின் உயிர் போக, செத்த பிறகு மகனுக்கு ஒரு வழிகாட்டி விட்டுச் செல்கிறார் அம்மா. 


அந்த வழியில் தனது என்ஜினீயரிங் பயணத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ். தொழில் எதிரிகள் அவரை அழிக்க நினைக்க, அதிலிருந்து மீண்டு எப்படி உயர்கிறார் என்பது கதை. இந்த கேரக்டர் தனுசுக்கு புதிதில்லை என்றாலும் அம்மாவிடம் அடிவாங்குவது, பக்கத்து வீட்டுப் பெண்ணை கவர்வது, வேலைக்குச் செல்லும் தம்பியிடம் ஈகோ பார்ப்பது என புதிதாகவும் செய்திருக்கிறார். அமலா பால் பக்கத்து வீட்டு பெண் போலவே இருக்கிறார். அப்படியே நடித்தும் இருக்கிறார். தனுஷின் சேட்டைகளை ரசித்து அதுவே காதலாக மாறுவதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். 

எனக்கு ரகுவரன்னு வில்லன் பேரை வச்சிருக்காங்க. என் தம்பிக்கு கார்த்திக்குன்னு ஹீரோ பெயரை வச்சிருக்காங்க என்று தனுஷ் புலம்பும்போது, எனக்கு ரகுவரனைத்தான் பிடிக்கும் என்று காதலை சொல்வது கவிதை. சமுத்திரக்கனி கண்டிப்பான அப்பா. சிடுசிடு முகமே பாதி நடித்து விடுகிறது. பளிச் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் அமிதேஷ். கோபம், விரக்தியை சரியாக வெளிப்படுத்துகிறார். ஆனால் கடைசியில் அவரை அடிவாங்கிய காலேஜ் பையன் மாதிரி கலங்க வைத்திருப்பது, முந்தைய காட்சிகளின் வலுவைக் குறைத்து விடுகிறது.

 கதை, குடும்பத்தை சுற்றும்போது நேர்த்தியாகவும், கட்டிடங்களைச் சுற்றும்போது பிரமாண்டமாகவும் கேமராவை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இயக்குனராக முதல் படத்திலேயே முத்திரை பதிக்கிறார். அனிருத்தின் இசையில் பாடல்கள் ஆட்டம்போட வைக்கிறது. முன்பகுதியில் கனமான கேரக்டர்களான வரும் சமுத்திரக்கனி, அமலாபால் பின் பகுதியில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறார்கள். குடும்ப குத்துவிளக்காக வரும் சுரபியை, செயின் ஸ்மோக்கராக காட்டியிருப்பதை ஏற்க முடியவில்லை. என்னதான் தனுஷ் பெரிய படிப்பாளி என்றாலும் வேலைக்கு சேர்ந்த 6 மாதத்திலேயே பத்து மாடி கட்டிடத்தை வடிவமைத்து கட்டுகிறார் என்பதில் லாஜிக் இல்லை. 

சண்டை போடக்கூடாது என்று அம்மா கையில் கயிறு கட்டுவது, இக்கட்டான நேரத்தில் அதை கழற்றிவிட்டு எதிரிகளை பந்தாடுவதெல்லாம் மனோகரா காலத்து ஐடியா. இப்படி சில குறைகள் இருந்தாலும் கவர்கிறார் இந்த பட்டதாரி. 


வேலையில்லா பட்டதாரி விமர்சனம் Reviewed by NEWMANNAR on July 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.