இனப்படுகொலையே இங்கு நடந்தது
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையேயாகும் என்று யாழ்.சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்டனிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் சுமுகமான உறவு நிலவ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் வலியுறுத்திய அவர்,வடமாகாண சபையில் நிறை வேற்றப்பட்ட இன அழிப்பு தொடர்பான பிரேரணையுடன் ஆவணங்களையும் ஐ.நா.உதவிச் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தை மேற் கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று வடமாகாண சபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை உள்ளூராட்சி அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,
வடபகுதி மக்களின் நிலைமைகளை அறிந்துகொள்வதற்காக வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன்
பலரையும் சந்தித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக வடமாகாண முதலமைச்சரான என்னையும் அமைச்சர்களையும் சந்தித்தார்.
இதன்போது வடபகுதி மக்களின் தற்போதைய நிலமைகள், அரசியல் நிலமைகள் குறித்து பேசபபட்டது. குறிப்பாக அரசியல் நிலமைகள் தொடர்பாகவே எம்மிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. விசேடமாக வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு தொடர்பான பிரேரணை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன எனக் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நான் இது எமது மக்களுடைய மனோநிலையை வெ ளிப்படுத்தும் ஒரு ஆவணம் என்று கூறினேன். எங்களுக்கு சார்பாக இருக்கும் அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம் என்று கூறும் போது எங்களுடைய உண்மையான நிலை என்ன கடந்த காலம் முதல் தற்போது வரை நடைபெற்ற நிலமைகள் சரித்திரரீதியாக நடைபெற்றமை தொடர்பாக உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காக இத்தகைய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்துள்ள பிரச்சினைகளை வெ ளிக்காட்ட வேண்டிய சூழல் இருந்தமையால் இதனை வெ ளிப்படுத்தினோம்.மேலும் எதிர்காலத்தில் தமிழ் சிங்கள மக்களிடையே சுமுகமான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றால் தமிழ் மக்களுக்கு இதுவரை காலமும் நடைபெற்ற அவலங்கள், இன்னல்கள் தொடர்பாக சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இதனை நிறைவேற்றினோம்.
இதனை இனரீதியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எமது மக்களின் மனோநிலை இது. உண்மைகளை வெ ளிக்கொண்டுவருவதன் மூலமே எதிரகாலத்தில் இரு சமூகங்கள் இரு இனங்களிடையே சுமுகமான உறவை மேம்படுத்தலாம் எனக் கூறினேன்.
மேலும் எதிர்காலத்தில் எத்தகைய உறவை வைத்திருக்கப்போவதாக எம்மிடம் கேட்டார்கள். இதற்கு பதிலளித்த நான் தற்போதைய அரசு எங்களால் கொண்டுவரப்பட்டது நாங்களும் சேர்ந்து வாக்களித்த அரசாங்கம். ஆகவே இந்த அரசுக்கும் எங்களுக்கும் சுமூக உறவு நிலவவேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும் என தெரிவித்தேன்.
மேலும் ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டது ஒரு தடவை மட்டும் தான் என்றும் செப்டெம்பர் மாதம் அதே அறிக்கை வெளிவரும் எனவும் ஐ.நா. பிரதிநிதி தெரிவித்தார். புதிய அரசுக்கு சற்று காலதாமதம் வேண்டும் என்ற எண்ணம் ஐ.நாவின் நாடுகளுக்கு இருந்தது. அதனால் இது பிற்போடப்பட்டது. முன்னைய ஜனாதிபதி போல் அல்லாது மக்களிடையே சுமூகமான நல்லுறவை ஏற்படுத்தும் எண்ணத்துடன் இருக்கும் புதிய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சற்று காலதாமதம் கொடுப்பதில் தவறு இல்லையேன ஐ.நா பிரதிநிதி குறிப்பிட்டதாக முதலமைச்சர் கூறினார்.
இதேவேளை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு பிரேரணை மற்றும் முக்ககிய ஆவணங்களை ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளருக்கு கையளித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இனப்படுகொலையே இங்கு நடந்தது
Reviewed by NEWMANNAR
on
March 03, 2015
Rating:

No comments:
Post a Comment