மன்னார் மாந்தை மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வை நிறுத்துமாறு சி.ஐ.டி.யினர் மன்றில் கோரிக்கை.-Photos
மன்னார் திருக்கேதீஸ்வர மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை மேலதிக பகுப்பாய்வுக்கு உற்படுத்துவதை நிறுத்துமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்னார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த மனித எழும்புக்கூடுகள் தொடர்பான பகுப்பாய்வு செய்து அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சுமார் 27 ஆயிரம் அமெரிக்க டொலர் தேவைப்படுவதால் அதனை நிறுத்தி வைக்குமாறு வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியுள்ள கிணற்றிலும் வேறு இடங்களிலும் காணாமல் போனவர்களின் எச்சங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காணமல் போனோர் சார்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று(30) வியாழக்கிழமை மன்னார் நீதிவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது, அமெரிக்கா சிவில் பல்கலை கழகத்தில் இருந்து அறிக்கைகள் பெற்று கொள்வதற்காக 27 ஆயிரம் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும் இதனால் இதனை நிறுத்திவைப்பது நல்லது என கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தனர்.
இது வரைக்கும் தங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே முறைப்பாடுகள் எதுவும் தமக்குக் கிடைக்கப் பெறாததினால் மீள் அகழ்வை நிறுத்தி வைப்பதே சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மன்னார் நீதிவான் குறித்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த 2013 ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வம் மாந்தை பகுதியில் குடி நீர் இணைப்பை மேற்கொள்ள வீதி ஓரத்தில் குழாய் பதிப்பதற்காக குழி வெட்டிய போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து முன்னாள் மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி வைத்தியரெட்ண தலைமையில் அகழ்வு பணி இடம் பெற்ற போது 83 மனித மண்டை ஓடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
மன்னார் மாந்தை மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வை நிறுத்துமாறு சி.ஐ.டி.யினர் மன்றில் கோரிக்கை.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 30, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 30, 2015
Rating:



No comments:
Post a Comment