அண்மைய செய்திகள்

recent
-

இருட்டிய அறையில் உரசப்படும் பெண்களின் உடல்கள்: சோனாகாட்சி ஒரு பெண்ணடிமை பூமி

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை தொழில் மூலதனமாக்கி கொல்கத்தாவின் சோனாகாட்சியில் நடந்து வருகிறது பாலியல் தொழில்.
காடு, மலைகளில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் சிந்தனைகளில் அகப்படும், ஆலோசிக்கப்படாத ஒரு அரைவேக்காடு தீர்வு.

அது இந்த கணனி யுகத்திலும் தொடர்வதுதான் எப்படி?

சோனாகாட்சியில் பாலியல் ஊழியர்களாக இருக்கும் எந்த ஒரு பெண்ணும் இந்த தொழிலை விரும்பி தேர்ந்தெடுத்ததாக சொல்லவில்லை.

குழந்தை தொழிலாளர்களை மீட்பதில் காட்டும் அக்கறையை, பாலியல் தொழிலாளர்களை மீட்பதிலும் அரசு காட்டுவது மனிதநேயமே.

சோனாகாட்சியில் சிக்கிக்கொண்ட ஒரு இளம்பெண்ணின் வார்த்தையை கேளுங்கள். ”தினமும் புதிது புதிதாக பெண்களை பிடித்து வருகின்றனர். நாங்கள் தப்பிக்க முடியாமல தவிக்கின்றோம்.

எங்களுக்கு வெளியில் மக்கள் வாழ்கிறார்கள், ஒரு உலகம் இருக்கிறது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை காரணம் எங்களை மீட்க யாருமே இல்லை”

அவர்கள் ஒவ்வொருவருக்குமே சோனாகாட்சிக்கு வருவதுக்கு காரணமாக, சினிமா சம்பவம் போன்ற பின்னணி கதையும் உண்டு.

வலுக்கட்டாயமாக விற்கப்பட்டவர்கள், வறுமையால் வேறுவழி தெரியாமல் தரகர்களின் சூழ்ச்சியில் வந்து மாட்டிக்கொண்டவர்கள். காலப்போக்கில் அந்த சூழலுக்கு தங்களை சமாதானப்படுத்திக் கொண்டாலும் காலம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்ற காயங்கள், அவர்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் தெரிகிறது.

வயிற்றுக்காக மொத்த உடலை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறுகிய அறைகளில் சுருங்கிய இவர்களது உலகம். ஒரு கூண்டுக்கிளி வாழ்க்கை.

எந்த பெண்ணுமே இந்த தொழிலை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அனுபவப்பட்ட ஒரு ஊழியர் சொல்வதிலிருந்து, தொழிலான பிறகு பாலியல் கூட சித்ரவதை என்பது தெரிகிறது.

எவ்வளவு துன்பங்கள் துரத்தினாலும் அதுக்காக, அடைக்கலம் புகும் இடம் இதுவல்ல. இந்த வாழ்க்கை எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல, என்பது மட்டுமே சரியான தீர்வு.

யாருடைய மிருக உணர்ச்சிகளுக்காக இந்த பெண்கள் கைதிகளாக காத்துக் கிடக்கிறார்கள். இதை காம உணர்ச்சிக்கான பரிகாரம், பாலியல் பலாத்காரத்துக்கு ஒரு மாற்றாகும் என்று கூறுவதும் தவறுதான்.

இங்கு ஊழியம் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, பிள்ளைகளின் வாழ்க்கையையும் நாசமாக்கி விடுகின்றனர்.

ஒரு பெண் ஊழியர் தன் மகளை பள்ளியில் சேர்க்கிறார் இனி நீ அம்மாவை அங்கு போய் பார்க்கக் கூடாது என்பது பள்ளி விதிக்கும் கட்டுப்பாடு.

இன்னொரு ஊழியருடைய மகள் கலங்குகிறார், நான் எந்த தப்பும் செய்யவில்லை என் அம்மாவை காரணமாக்கி என்னை எல்லோரும் அவமதிக்கின்றனர்.

பாலியல் ஊழியரான எங்களை ஒதுக்கும் இந்த சமூகம் இங்கு விருந்தினராக வரும் ஆண்களை குற்றவாளிகளாக பார்ப்பதில்லை. இது இன்னொரு பெண்ணின் ஆதங்கம்.

சோனாகாட்சியில் உள்ள 10 ஆயிரம் பெண் பாலியல் ஊழியர்களை மீட்பதுதான் பெண்ணுரிமை பேசும் மகளிர் அமைப்புகளின் முதல் கடமையாக இருக்க முடியும்.

கசாப்பு கடைகளில் இறைச்சியை விலையாக்க, அவற்றின் உயிர்கள் போவதை பொருட்படுத்துவதில்லை. அதுபோல, ஒரு பெண்ணுடைய சகல திறமைகளும் இருட்டடைப்பு செய்யப்பட்டு உடல் மட்டுமே உரச பயன்படுத்தப்படுகிறது.

சுனாமி பேரழிவில் மரணத்துக்கே மரியாதை அற்றுப் போனது போல, பெண்மை இங்குதான் தலைகுனிந்து தவிக்கிறது.

பெண்மை ஒரு தேனருவி, அது எல்லா காலத்திலும் எல்லோராலும் குளிக்கப்படும் நீரருவி அல்ல.

சோனகாட்சியை நடத்துபவர்களும், அதன் வாடிக்கையாளர்களும், அதை தடுக்க மனமில்லாத அரசும் இதை புரிந்துகொள்ளட்டும்.




இருட்டிய அறையில் உரசப்படும் பெண்களின் உடல்கள்: சோனாகாட்சி ஒரு பெண்ணடிமை பூமி Reviewed by Author on July 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.