காலத்தை மாற்றித் திருத்திய காவிய நாயகன் சே குவேரா: 48 ஆவது நினைவு தினம்
தன்னிகரில்லா ஓர் போராளியின் கல்லறை என்பது, காலம் கடந்தும் வீரியம் குன்றாத மாபெரும் காவியத்தின் கருவூலமே!
புரட்சியைப் புதைத்தபோது அதனை முளைக்க வைத்து, எரித்தபோது உயிர்க்கவைத்த மாபெரும் புரட்சியாளன், பூவுலக வாழ்வை நீத்ததன் 48 ஆவது வருடப்பூர்த்தி இன்றாகும்.
காலத்தை மாற்றித் திருத்திய அந்தக் காவியத்தின் பெயர் சேகுவேரா.
எர்னெஸ்ற்றோ சேகுவேரா எனும் இந்த நாமம், புரட்சிக்கனல் கக்கும் ஓர் மாபெரும் புரட்சியாளனின் முகவரி மாத்திரமல்ல எக்காளமிட்ட ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் அச்சத்தின் எதிரொலி.
ஆர்ஜென்டீனாவில் 1928 ஆம் ஆண்டு ஜீன் 14 ஆம் திகதி பிறந்த சேகுவேரா,
மாக்சியவாதி, மருத்துவர், இலக்கியவாதி, யுத்த வல்லுனர், இராஜதந்திரி எனும் பல்வேறு பரிணாமங்களைத் தன்னகத்தே கொண்ட புரட்சியாளர்.
மண்டியிட்டு வாழும் இலத்தீன் அமெரிக்க தேச மக்களின் வாழ்வின் எழுச்சிக்கான சிந்தனையில் ஆழ்ந்திருந்த சேகுவேரா, மெக்சிகோவில் கியூபப் புரட்சியாளர் பிடல் கெஸ்ட்ரோவை சந்தித்து நட்புப் பூண்டார்.
பின்னர் கியூபாவில் கொடுங்கோன்மை புரிந்த படிஸ்டாவின் ஆட்சியைக் கவிழ்க்கும் ஃபிடலின் எண்ணத்தை அறிந்த சே, ஜூலை 26 இயக்கத்தில் இணைந்துகொண்டார்.
மேற்குலக ஆட்சியாளர்கள் அசாத்தியம் என நினைத்திருந்த புரட்சியை, கியூபாவில் சாத்தியப்படுத்தும் நோக்கில் செயற்பட்ட சே, கெஸ்ட்ரோவின் தோளோடு மாத்திரமன்றி சன்னங்களின் சல்லடைக்கும் தோள்கொடுத்தார்.
புரட்சியைக் காட்டுத்தீயாய் இலத்தீன் அமெரிக்க தேசமெங்கும் பரப்பும் நோக்கில் மெக்சிகோ, கொங்கோ, பொலிவியா என பல நாடுகளுக்கு பயணம் செய்த சேகுவேரா அங்குள்ள பேராளிகளுக்கு பயிற்சிகளையும் வழங்கினார்.
அன்று பொலிவியாவில் பொங்கியெழுந்தார் சே…
பதற்றமடைந்த சீ.ஐ.ஏவின் கழுகுக் கண்கள் எண்திக்கும் நோட்டமிட்டன.
டொலர் கனவுகளுக்குள் அகப்பட்ட யூதாஸ் வழித்தோன்றல் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட சேயின் உடலை சன்னங்கள் 1967 ஆம் ஆண்டு இன்று போன்றதோர் நாளில் சல்லடையிட்டன.
பிறர் நலனுக்காய் பொலிவியாவில் அன்று மூச்சிழந்த சேகுவேரா, இன்றும் புரட்சியின் முகவரியாய் மக்கள் இதயங்களில் வாழ்ந்து வருகின்றார்.
காலத்தை மாற்றித் திருத்திய காவிய நாயகன் சே குவேரா: 48 ஆவது நினைவு தினம்
Reviewed by NEWMANNAR
on
October 10, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 10, 2015
Rating:


No comments:
Post a Comment