அண்மைய செய்திகள்

recent
-

எமது இறைமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை கைது செய்யவும்: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசம்-Photos


எமது இறமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை உடன் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் கடற்படைக்கு அறை கூவல் விடுப்பதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசம் தெரிவித்துள்ளது.


இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் வருகையை தடுக்க அவ்வப்போது ஒரு சில நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டாலும் அது எமது கடல் எல்லையினை தாண்டும் இந்திய மீனவர்களின் வருகையில் 0.03மூ சதவீதம் குறைவாகும்.

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசத்தில் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலம்,மன்னார் மாவட்ட கடற்தொழில் சம்மேளனத் தலைவர் ஏ.ஜஸ்ரின் சொய்சா மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையிலே, இந்திய மீனவர்களினால் அழிக்கப்படும் கடல் வளம் வருடமொன்றுக்கு 5.293 மில்லியன் ரூபா ஆகும். இது வடபகுதி மீனவர்களின் ஒரு தனிநபருக்கான வருவாயில் 29.015 ரூபாய் இழப்பாகும்.

இந்திய மீனவர்களால் எமது இறைமை வருடமொன்றிற்கு 36 ஆயிரம் தடவை மீறப்படுகின்றது.

இது இந்திய அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். நாம் இவ் இந்திய மீனவர்களின் வருகை மற்றும் அவர்களின் தொழில் முறைக்கு எதிராக பல போராட்டங்கள், மாநாடுகள், பாதயாத்திரைகள், சந்திப்புக்கள் நடாத்தியும் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் கவனம் செலுத்துவதாக இல்லை.

ஏனெனில் பாதிக்கப்படும் சமூகம் வடபகுதி தமிழ் சமூகம் என்ற சிந்தனை அரசுக்கும், இந்திய அரசின் பகமையை சம்பாதிக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் எமது தமிழ் தலைவர்களும் தமிழ் நாட்டின் உறவினை மேம்படுத்தவும் அதனூடாக தமது மாகாண சபையின் அதிகாரங்களை இந்திய தமிழக அரசின் அழுத்தம் ஊடாக பெற்றுக்கொள்ள முனையும் வடமாகாண சபையும் இந்திய இழுவைப் படகு வருகை தடுக்கப்பட்டால் தாங்கள் செய்யும் சட்ட விரோத தொழில்கள் நிறுத்த வேண்டி வரும் என சிந்திக்கும் எமது மீனவ முதலாளிகளும் தமது வாக்கு வங்கியை நிலை நிறுத்திகொள்ள மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் இத்தொழில் புரியும் எமது மீனவர் தொடர்பாக எந்தவித தீர்மானங்களையும் எடுப்பதற்கு தயங்குகின்றனர்.

வடபகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது பாராளுமன்றத்தில் இந்திய மீனவர்களின் வருகைக்கு எதிராக விவாதிக்காத காரணத்தால் எமது கடல் வளத்தை இந்திய இழுவைப்படகுகள் சூறையாடுகின்றன.

இனியும் நாம் பொறுமை காப்போம் என்றால் எமது எதிர்கால சந்ததியினர் மீன்பிடித்தொழிலை கைவிட்டு கூலித்தொழிலாளிகளாக மாறிவிடுவர் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்ல நேரிடும்.

எமது அடுத்த சந்ததியில் வசதி படைத்தவர்கள் கடல் உணவினை இறக்குமதி செய்து உண்ணும் நிலை ஏற்படும். வசதியற்றவர்கள் போசாக்கற்ற குழந்தைகளை (சோமாலியா) போல் மாறும் நிலை ஏற்படும்.

எனவே எமது இறமையை பாதுகாக்கும்படி எமது கடற்படையிடம் நாம் மன்றாட்டாக வேண்டிக்கொள்வது தாங்கள் இந்நாட்டின் மீது கொண்டுள்ள பற்று மற்றும் இந்நாட்டு மக்களை பாதுகாக்க தாங்கள் செய்து கொண்ட உறுதி மொழிக்கு அமைவாக எமது நாட்டு எல்லையினை வேற்று நாட்டவர் எவரும் மீறாத வண்ணம் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்றுமாறு மன்னார் மாவட்ட மீனவ சமூகமாகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம்.



தங்களின் நடவடிக்கைகளுக்கு நாம் மதிப்பளித்து துணையாக நிற்போம். எமது இறமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை உடன் கைது செய்யவும் கடற்படைக்கு அரைகூவல் விடுப்பதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



எமது இறைமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை கைது செய்யவும்: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசம்-Photos Reviewed by NEWMANNAR on October 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.