முதலமைச்சரை விமர்சித்தால் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவர்...
வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மீது தமிழ் மக்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர்.
தமிழ் மக்களின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் என்பது மறுக்க முடியாத உண்மை.
வடக்கு மாகாண சபையில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றதால்தான், பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சியால் வெற்றி பெற முடிந்தது.
ஆக, வடக்கு மாகாண சபையின் வெற்றி என்பது நீதியரசர் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தியதால் கிடைத்ததாகும்.
இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார்.
அதாவது தமது கட்சி சார்ந்தவர் எவர் எதிர்த்தாலும் விக்னேஸ்வரனே வடக்கின் முதன்மை வேட்பாளர் என்பதில் இரா.சம்பந்தன் மிகவும் தெளிவாக இருந்தார்.
நீதியரசரை அதிலும் இறை நம்பிக்கை கொண்ட நீதியரசரை முதலமைச்சராக்கினால் அவர் நீதியைத்தான் உரைப்பார் என்பது சம்பந்தனுக்கு நன்கு தெரியும்.
எனினும் தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய சிலர் வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இந்தக் கூற்றின் பின் விளைவுகள் பற்றித் தெரியாதவர்களால் மட்டுமே இப்படியான கருத்துக்களைக் கூறமுடியும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பதவியில் எவர் கை வைத்தாலும் வடக்கில் பெரும் களேபரம் ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, தமிழர் தாயகத்தில் சமய ஒற்றுமை ஏதோவொரு வகையில் கட்டிக் காக்கப்படுகிறது.
சமய ஒற்றுமையைப் பேண வேண்டும் என்பதில் இந்து மக்கள் மிகவும் நிதானமாக உள்ளனர். இந்து மக்கள் குழம்புவார்களாக இருந்தால், சமய ஒற்றுமை என்பது நிலை குலைந்து போய்விடும்.
எனினும் ஒரு சில அரசியல்வாதிகள் சமயத்தின் பெயரால் விக்னேஸ்வரன் அவர்களை பதவி விலத்த முற்படுகின்றனர் என்று இந்துத் தமிழ் மக்கள் நினைப்பார்களாயின்- அப்படியானதொரு நிலைமை ஏற்படுமாயின் அதன் விளைவு மிகப் பெரும் பாதகமாக அமையும்.
ஆகையால், கொழும்புத் தமிழ் அரசியல் தலைமை மிகுந்த நிதானத்துடன் நடந்து கொள்ளவேண்டும்.
இது தவிர, மாகாணசபையிலும் முதலமைச்சரை எதிர்க்கின்ற சில உறுப்பினர்களில் ஒரு சிலர் மதப் பாகுபாடு பார்ப்பவர்கள் என்ற கருத்துக்களும் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது.
எனவே தமிழர் தாயகத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒரு சில அரசியல்வாதிகள் சமயக் காழ்ப்புணர்வைக் காட்டுவது மிகப்பெரிய ஆபத்தை உண்டு பண்ணும் என்பதால், முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி விலக்குதல் என்ற நினைப்பை அடியோடு கைவிடுவது நல்லது.
இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ச தனது பதவிக்கால முதிர்வுக்கு முன்னதாக தேர்தலை அறிவித்தது போன்ற மிகப்பெரும் மடமைத் தனத்தை தமிழரசுக் கட்சியும் செய்ததாக இருக்கும்.
இத்தகையதொரு செயற்பாட்டின் பின் விளைவு தமிழ் மக்களிடம் இருந்து தமிழரசுக் கட்சி அந்நியப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.
முதலமைச்சரை விமர்சித்தால் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவர்...
Reviewed by Author
on
November 11, 2015
Rating:
Reviewed by Author
on
November 11, 2015
Rating:


No comments:
Post a Comment