சிறையில் போராடும் தமிழ் உறவுகளின் விடுதலைக்கான பொதுவேலை நிறுத்தம்...
போராடும் கைதிகள் விடுதலைபெற வேண்டும், நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும், நீதிமன்றத் தீர்ப்பில் சிறைவைக்கப்பட்டவர்களும் எம் தமிழ் உறவுகள் பல ஆண்டுகள் விடுதலையின்றி, எதிர்காலமின்றி விடுதலைக்காகப் போராடுகின்றனர்.
இக்கைதிகள் 07.11.2015 ற்கு முன்னர் விடுதலை செய்யப்படுவார்களென்று ஜனாதிபதியும், அரசும் வாக்குறுதியளித்தனர்.
அதனால் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினர். விடுதலை கிடைக்காததால் ஏமாற்றமடைந்து மீண்டும் அக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த திகதிக்கிடையில் 05.11.2015 அன்று பாராளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 09ம் திகதியிலிருந்து முதற்கட்டமாக 32 பேரும் அடுத்து 20ம் திகதிக்கு முன் 30 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும்,
மேலும் 68 பேர் அமைச்சரவை குழுவின் சிபார்சில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் குற்றவாளிகளாகத் தீர்ப்புப் பெற்றவர்கள் ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கத் தீர்மானமெடுத்து விடுவிக்கப்படுவார்களென்றும் தீர்மானமாக அரசினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்றே, அரசு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலும் இக்கைதிகள் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி முதல்வருமான திரு. சம்பந்தனும் நாமும் அரசையும் வற்புறுத்தினோம். அன்றே ஜனாதிபதியிடமும் சந்தித்து வற்புறுத்தியிருக்கின்றோம்.
இத்தீர்மானம்; நடைமுறைக்கு வருமுன்னரே விரக்தியும், வெறுப்பும் நம்பிக்கையீனமும் அடைந்த கைதிகள் மீண்டும் உண்ணாவிரதமிருக்கிறார்கள்.
இருப்பினும் அவர்களின் விடுதலைக்காக அப்போராட்டத்திற்கு நாமெல்லாம் ஆதரவு வழங்கவேண்டும்.
நாமும் அவர்கள் விடுதலை பெறும் வரை பொருத்தமான வடிவங்களில் ஜனநாயக வழியில், அமைதி வழியில் போராட்டங்களில் ஈடுபடவேண்டியதும் அவசியமாகும்.
இவ் ஆதரவும் போராட்டமும் சிறையில் போராட்டத்தில் ஈருபடுவோருக்கு விடுதலையும், நீதியும் கிடைக்க வேண்டுமென்பதற்கானதே.
ஜனாதிபதியும், அரசும் வழங்கிய வாக்குறுதியின்படி சிறையில் போராடும் தமிழ் கைதிகளில் சில சிங்கள, முஸ்லீம் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டுமென மீண்டும் மீண்டும் வற்புறுத்துகின்றோம்.
எங்கள் குரலும் அறவழிப் போராட்டமும் வெற்றிபெறவும், கைதிகள் விடுதலைபெறவும் அனைவரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு இயங்குவதும் அவசியமாகும்.
இதன்பொருட்டு பாராளுமன்ற, மாகாண உறுப்பினர் மற்றும் சமய நிறுவனங்கள், வர்த்தக சபைகளுடனும் ஏனைய கட்சிப் பிரதிநிதிகளுடனும் தொடர்புகொண்டுள்ளோம்.
இன்னும் இரண்டொரு நாளில் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுவிக்கப்படும். அதற்குள் வவுனியாவில் பல அமைப்புப் பிரதிநிதிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வவுனியாவில் கதவடைப்பு நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
ஆனால் நாம் அவர்களுடனும் பேசி குறிப்பாக வடக்கு கிழக்கு மாநிலத்தில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடின் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம், அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுவதற்கும் நடவடிக்கை ஏற்படவேண்டுமென வற்புறுத்துவோம்.
எவ்வாறெனினும் எமது இலக்கு போராடும் கைதிகள் விடுதலை பெற வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அவர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாதவாறும் வன்முறைகளுக்கு எந்தவகையிலும் இடமளிக்காமலும் எமது நடவடிக்கைகள் மிகுந்த அமைதியாக இடம் பெறவேண்டும் என்று வற்புறுத்தி அழைப்பு விடுக்கின்றோம்.
என குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் போராடும் தமிழ் உறவுகளின் விடுதலைக்கான பொதுவேலை நிறுத்தம்...
Reviewed by Author
on
November 09, 2015
Rating:
Reviewed by Author
on
November 09, 2015
Rating:


No comments:
Post a Comment