அண்மைய செய்திகள்

recent
-

கொல்லென கொல்லும் மழை-கவிதை


வானம் அழுது
பூமிக்கு வந்த மழை
நாங்கள் அழுத
கண்ணீரில்
நனைந்தது.

நிலம் கடலானது
குளம் கூளமானது
ஆறு ஏழானது
எங்கள் வாழ்வு பாழானது....
ஒரு நாளில்....

அன்று மழை வேண்டி
தொழுதவர்கள்
இன்று
மழை தீண்டி
அழுத கொண்டிருக்கிறோம்....

போன வருடப் போரில்
தோற்றுப்போய்
புறமுதுகிட்டோடிய
மழையரசன்...

இம்முறை
கோடான கோடி
போர்வீரர்களோடும்
இடி மின்னல்களோடும்
புயலோடும் வந்து
அடித்த அடியிலும்
இடித்த இடியிலும்
கோட்டை
கொத்தளங்களை இழந்து
கட்டடங்களை
கட்டியணைத்து
கதறிக்கொண்டிருக்கிறோம்.

குளத்தை
துடிக்கத் துடிக்க கொன்றோம்
ஆற்றினை சிறைபிடித்தோம்
வயல் நிலங்களை
சிலுவையில் அறைந்தோம்...
மரங்களின் கரங்களை
முறித்தோம்
காட்டினை கதறக்கதற
கற்பழித்தோம்.

காட்டுமிராண்டிகள்
நாங்கள்
இயற்கைக்கு செய்த கொடுமை
கொஞ்ச நஞ்சமல்ல....
நேற்று நாங்கள் விதைத்தோம்
இன்று அறுவடை செய்கிறோம்....

இயற்கை என்பது
சிங்கம் புலி போன்று
சினம் கொண்டதல்ல
நாயைப்போன்று
நன்றியுள்ளது

வாழவைத்தால் வாலாட்டும்
காதலோடு
காவலிருக்கும்
நாங்கள்
கல்லெடுத்து அடித்தால்
கடிக்குமா..
இல்லை
வா ...வந்து
என்னை கொல்லென்று
செங்கம்பளம் விரித்து வரவேற்குமா....?

இயற்கையை
கொன்றொழித்த
அயோக்கிய
கொலைகாரர்கள் நாங்கள்
வாருங்கள்...
மரங்களை நட்டு
மன்னிப்பு கேட்போம்.....!!

கடந்த கால தவறுகளை
நாம் கொல்லாதவரை...
எம்மை திருத்திக்கொள்ளாதவரை
தொடர்ந்தும்
இதுபோல் கொல்லென கொல்லும் மழை....

கவிஞர்
அஸ்மின்

கொல்லென கொல்லும் மழை-கவிதை Reviewed by NEWMANNAR on November 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.